
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதை சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரகம் சார்பில் இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் சான்று பெற்ற, அறிவிக்கப்பபட்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். திருவள்ளூர் மாட்டம், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்திருப்பதால் சில விவசாயிகள் அவர்களே நேரடியாக அங்கு சென்று நமது மாநிலத்திற்கு அறிவிக்கப்படாத மற்றும் சான்று பெறாத பருவத்திற்கு ஏற்பில்லாத நெல் ரகங்களை கொள்முதல் செய்து சாகுபடி செய்வது தெரியவந்தது.
அவ்வாறு சாகுபடி செய்வதால் விரைவில் கதிர் வருதல், கதிர் தாமதமாக வருதல் முதலான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் விதை விற்பனை நிலையங்கள் 6 முதல் 8 மூட்டைகள் மட்டுமே அடுக்க வேண்டும். விதைகளுக்கு என்று தனியாக சேமிப்பு கிடங்கு அமைத்து தரையில் சேமிப்பு சட்டங்கள் மேல்தான் வைக்க வேண்டும். மேலும் உரம் மற்றும் பூச்சி மருந்துடன் வைக்கக் கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். சரியான சேமிப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை பட்டியல் உரிய படிவத்தில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விற்பனையாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறுவோர் மீது உரிய சட்ட பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு இணை இயக்குநர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது சென்னை விதை ஆய்வு மற்றும் அங்கக சான்று இயக்குனரக அலுவலக வேளாண்மை அலுவலர் செல்வகுமார், திருவள்ளூர் பகுதி விதை ஆய்வாளர் சதீஷ்குமார், புழல் பகுதி விதை ஆய்வாளர் உமா மகேஸ்வரி உட்பட பலர் இருந்தனர்.
The post தனியார் விதை விற்பனை நிலையங்களில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.