×

துவாரகா விரைவுச்சாலை மெகா ஊழல் ‘தங்க’ சாலை போடும் பாஜ: ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு; சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்; ஒன்றிய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

* நமது சிறப்பு நிருபர் பாலாஜி, மும்பை.
துவாரகா விரைவுச்சாலை பாலம் தொடர்பான வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, இது ஒரு இன்ஜினியரிங் அதிசயம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது சாதாரண அதிசயம் அல்ல, இதுவரை நடந்திராத அளவுக்கு அரங்கேறியுள்ள கற்பனைக்கே எட்டாத ‘அதிசய ஊழல்’ என எதிர்க்கட்சிகள் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக வரிந்து கட்டி களம் இறங்கியுள்ளன. டெல்லி குருகிராம் இடையேயான இந்த திட்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது ஆம் ஆத்மி.

துவாரகா விரைவுச்சாலை தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தான் இந்த பூதாகரமான பிரச்சனை தலைதூக்கி, ஒன்றிய பாஜ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. பாரத் மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக துவாரகா விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் குருகிராம் இடையே தேசிய நெடுஞ்சாலை 48ல் 14 வழி உயர் மட்டச் சாலை அமைப்பதன் மூலம் அந்தச் சாலையில் நெரிசலை போக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் இந்தச் சாலை அமைக்கும் திட்டத்தை 2006ம் ஆண்டு செயல்படுத்த முன்வந்தது காங்கிரஸ் தலைமையில் இருந்த அப்போதைய அரியானா அரசு தான். குருகிராம் மானேசர் நகர்ப்புற கட்டுமான திட்டத்தின் கீழ், டெல்லி துவாரகாவில் இருந்து குருகிராம் வரை 29.06 கிலோமீட்டர் தூரத்துக்கு விரைவுச் சாலை அமைக்க முடிவு செய்திருந்தது. இதற்காக 150 மீட்டர் நிலத்தையும் கையகப்படுத்தியது. ஆனால் இந்தத் திட்டம் பின்னர், ஏதோ காரணங்களால் கிடப்பில் போய்விட்டது. இதன் பிறகுதான் இந்தத் திட்டத்தை பாரத் மாலா பரியோஜனா – 1 திட்டத்தின் கீழ் செயல்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து 90 மீட்டர் நிலம் அரியானா அரசால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. ஒன்றிய அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கான செலவு பல மடங்கு அதிகரித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது, கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.18.20 கோடிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மட்டுமே ஒன்றிய அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்தபிறகு, கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி என்ற விகிதத்தில் பொறியியல், கொள்முதல், மற்றும் கட்டுமான டெண்டரை விட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம், திட்டப்பணிக்கான செலவு அமைச்சரவை ஒப்புதல் அளித்த ரூ.529 கோடியில் இருந்து ரூ.7,287 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதை விடவும் கூடுதலாக ரூ.6,758 கோடி முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த பகீர் விவரம் வெளிவந்த பிறகுதான், தார்ச்சாலைக்கு பதிலாக தங்கத்தில் சாலைபோடும் திட்டத்தையா செயல்படுத்துகிறது ஒன்றிய பாஜ அரசு என எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கத் துவங்கியுள்ளன.

ஏற்கெனவே 6 வழிச்சாலை இருக்க அதை விரிவுபடுத்துவதை விட்டு விட்டு, உயர்மட்டச் சாலை அமைக்க திட்டமிட்டது ஏன் என்ற கேள்வியையும் சிஏஜி எழுப்பியுள்ளது. ஆனால், முதலில் 14 வழிச்சாலையை தரையில் அமைக்க திட்டமிட்டதாகவும், பின்னர் உள்ளூர் மக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக 8 வழி மேம்பால சாலையையும், 6 வழிச்சாலை தரையிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது என நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் மக்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக பல மடங்கு அதிக பணம் செலவிட்டு உயர்மட்டச் சாலையை அமைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மக்கள் சாலையை கடக்க தீர்வு காணும் வகையில், தேவைப்படும் இடங்களில் சுரங்கப்பாதை அமைத்தாலே போதுமே. இதற்காக இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி கூடுதலாக ரூ.6,758 கோடி செலவு செய்து வீணடித்திருக்கிறீர்களே என சிஏஜி அறிக்கை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை இல்லாமலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய சிஏஜி, அரியானா அரசு 90 மீட்டர் நிலம் வழங்கியிருந்தாலும் 14 வழிச்சாலை அமைக்க 70 முதல் 75 மீட்டர் நிலம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒன்றிய பாஜ அரசு மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துவாரகா விரைவுச்சாலை திட்டம் கற்பனைக்கெல்லாம் எட்டாத அளவுக்கு அதிக செலவில் அமைக்கப்படுவது யாராலும் ஏற்க முடியாத ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிஏஜி அறிக்கை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் டெல்லி சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
ஒன்றிய பாஜ அரசில் நடந்த துவாரகா விரைவுச் சாலை மெகா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆம்ஆத்மி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதை எதிர்த்து பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஒன்றிய பாஜ அரசு ஊழலில் புதிய சாதனை படைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். சமீபத்திய மாநில பேரவை தேர்தல் தோல்விகள் பாஜவுக்கு பெரிய சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கறைபடியாதவர்கள் என கூறிக்கொள்ளும் ஒன்றிய அரசின் உண்மை முகம் வெளிப்படுவதை போல, அடுத்தடுத்து வெளிவரும் ஊழல் குற்றச்சாட்டுகள் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* ‘சிஏஜியால கூட மறைக்க முடியல’
துவாரகா திட்ட ஊழலை கண்டித்து ஆம்ஆத்மியினர் துவாரகா நெடுஞ்சாலையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். துவாரகா விரைவுச்சாலை திட்டத்தில் நடந்திருப்பது மிகப்பெரிய ஊழல். திட்ட செலவு 14 மடங்கு அதிகரித்திருப்பது ஒரு போதும் ஏற்கத்தக்கதல்ல. பல்வேறு வகையிலும் ஆம்ஆத்மி கட்சி மீது பாஜ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், டெல்லி ஆம்ஆத்மி அரசால் செயல்படுத்தப்பட்ட ஆசாத்பூர் மேம்பாலத்திட்டம், திட்ட மதிப்பீட்டை விட ரூ.100 கோடி குறைவான செலவில் கட்டப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்து, அவர்களுக்காக உயர்ந்த வசதிகளை நாங்கள் மேம்படுத்துகிறோம். ஆனால், ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளன. சிஏஜியால் கூட மோடியின் ஊழலை மறைக்க முடியவில்லை, என்றனர்.

* காற்றில் பறக்கவிட்ட நடைமுறை
டெல்லி – வதோதரா, துவாரகா எக்ஸ்பிரஸ் அலை போன்று அதிக செலவில் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தீவிர ஆலோசனை நடத்தி, நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்து உரிய அதிகாரி அல்லது ஆலோசனைக் குழு மூலம் அனைத்து வகையிலும் அலசி ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும். ஆனால், சாலை திட்டங்களில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அவசரகதியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் திட்டமானது முதலில் ஹரியானா அரசால் குருகிராம் மானேசர் நகர்புற கட்டுமான திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. டிரக்குகளுக்கான தனிப் பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

* நிறுவனத்துக்கு தடை விதிப்பு
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஏஇசிஓஎம் நிறுவனத்துக்கு துவாரகா விரைவு சாலை திட்டத்தின் ஒரு பகுதி ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக 2018ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் இந்த நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 107 மற்றும் 109 தூண்களுக்கு இடையே ஸ்லாப்புகள் விழுந்து விபத்து ஏற்பட்டு சில ஊழியர்கள் காயமடைந்தனர். இந்த நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்ததோடு, 3 மாதங்களுக்கு நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* நிறைவடைந்த பணிகள் எவ்வளவு?
துவாரகா விரைவுச்சாலை திட்டம் பிரிவுகளாக பிரித்து தனித்தனி திட்டங்களாக ஒப்படைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, திட்டப் பணிகள் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் இடையே ஒப்புதல் தரப்பட்டன. மேற்கண்ட பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு 2020 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டு இறுதியில்,60.5 சதவீதம் முதல் 99.25 சதவீத வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் பணிகள் தொடர்ந்த நிலையில், 18.9 கி.மீ நீள விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 10 கி.மீ நீளத்துக்கு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும்
துவாரகா விரைவுச்சாலை தொடர்பாக சிஏஜி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதனை அவ்வப்போது, தணிக்கை செய்ய வேண்டும். ஓராண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்வது சரியல்ல. குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது தணிக்கை செய்தால்தான் அந்த திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்ய முடியும். உபரி நிதி செலவாவதையும் தடுக்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது.

* சுங்க கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம்
துவாரகா விரைவுச்சாலை தேசிய நெடுஞ்சாலை 48 இல் ஷிவ் மூர்த்தி அருகில் தொடங்கி கெர்க்கி தவுலா சுங்கச்சாவடி முன்பாக நிறைவடையும். இந்த விரைவுச்சாலை அமைப்பதற்கான செலவு ஒரு கிலோமீட்டருக்கு 250.77 கோடி ஆகிறது. ஒரு சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளின் படி கணக்கிட்டால், இந்தச் சாலையில் கட்டுமான செலவுகளை மீட்டெடுக்க வேண்டுமானால் காருக்கு ரூ.290 என்ன நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் சாலையில் ஏற்கெனவே உள்ள கட்டணம் ரூ.60 மட்டுமே. எனவே, சுங்க கட்டணம் பல மடங்கு உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்பதை சிஏஜி சுட்டிக்காட்டி இருக்கிறது.

* தேவையா உயர்மட்ட சாலை?
உள்ளூர் மக்கள் சாலையை கடக்க வசதியாக உயர்மட்ட சாலை அமைக்கப்பட்டது என்ற நெடுஞ்சாலை ஆணைய வாதத்தை ஏற்க மறுத்த சிஏஜி, துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சரக்கு வாகனங்கள் தவிர தினமும் சராசரியாக 55,432 பயணிகள் வாகனங்கள் குரு கிராமை தாண்டி நீண்ட தூரங்களுக்கு பயணப்படுகின்றன. இதை விட அதிகமாக , அதாவது 2,32,959 பயணிகள் வாகனங்கள் செல்வதற்கே 6 வழிச்சாலை போதுமானதாக உள்ளது. அப்படியிருக்க 55 ஆயிரம் வாகனங்கள் செல்வதற்காக இந்த சாலைத் திட்டம் அமைக்கப்பட்டது என்ற விளக்கத்தையும் சிஏஜி ஏற்க மறுத்து கண்டிப்பு தெரிவித்துள்ளது.

The post துவாரகா விரைவுச்சாலை மெகா ஊழல் ‘தங்க’ சாலை போடும் பாஜ: ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு; சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்; ஒன்றிய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Dwarka ,Expressway ,BJP ,CAG ,Aam Aadmi Party ,Union Government ,Balaji, Mumbai ,Union ,Minister ,Dwarka Expressway Bridge… ,Aam Aadmi ,Dinakaran ,
× RELATED மும்பை-புனே விரைவுச் சாலையில்...