×

ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விட வலியுறுத்தி பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம், இவ்வழக்கில் ஆஜராக கர்நாடக அரசு அரசு தரப்பு வக்கீலாக கிரண் எஸ். ஜவுளியை நியமனம் செய்தது. இதையடுத்து சொத்துக்களை ஏலம் விடப்படும் பணியை பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ. மோகன் அமர்வு துரிதப்படுத்தியது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏலம் விட வேண்டிய முழு சொத்துக்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வக்கீல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் ஏலம் விடப்பட வேண்டிய முழு சொத்துக்கள் பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைரம் நகைகளின் பட்டியல் மற்றும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தின் பட்டியல் மற்றும் லெக்ஸ் ப்ராப்பர்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிவர் வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், இந்தோ டோதா கெமிக்கல் மற்றும் பார்மா லிமிடெட் ஆகிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துக்கள் பட்டியலையும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்துள்ள ஆறு பினாமி நிறுவனங்களின் 65 சொத்துக்களின் பட்டியலில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில் இதை ஏலம் விடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதி விவரம் கேட்டு பெற்றார். மேலும் வங்கிகளில் உள்ள வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளில் உள்ள பணத்தின் இன்றைய மதிப்பீடு குறித்து வங்கிகளுக்கு கடிதம் எழுதி தகவல்கள் பெற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் வரும் 31 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

* ஏலம் விட முடியாது; சமூக ஆர்வலருக்கு அறிவுரை
ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கருத்து கூறும்போது, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என மனுதாரரர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த லஞ்ச-ஒழிப்பு போலீசார், மனுதாரர் குறிப்பிட்டுள்ள இந்த சொத்துக்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அவை வழக்கில் பட்டியலிடப்பட்ட நிலையில் அப்பொழுதே ஜெயலலிதாவின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதை சுட்டி காட்டிய நீதிபதி, மேற்கொண்ட சொத்துக்கள் யாவும் நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால் ஏலம் விட முடியாது என தெரிவித்தார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மனுதாரர் கூறியுள்ள எந்த பொருட்களும் இடம் பெறவில்லை. மனுதாரரர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளை முழுவதும் வாசிக்காமல் இவ்வாறு மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நரசிம்ம மூர்த்திக்கு அறிவுரை வழங்கினார்.

The post ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Bengaluru ,Tamil Nadu ,Sasikala ,Sudhakaran ,Illacassa ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...