
ஆவடி: பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணியை ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து இணை ஆணையாளர் விஜயலட்சுமி அவர்கள் வழிகாட்டுதல் படி, ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி சாலை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆவடி சுற்று பகுதியில் அமைந்துள்ள 24 பள்ளியை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இணைந்து, சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி, விழிப்புணர்வு முழக்கங்களை சொல்லியபடி காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணியாக சென்றனர்.
காமராஜ் நகர் வளைவு பகுதியில் சரியான முறையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பள்ளி மாணவிகள் ரோஜா பூ கையில் கொடுத்து நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சரியான முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து காவலர்கள், காவல்துறையினர்கள் உடன் இருந்தனர்.
The post பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.