
- விவசாயிகள் சங்கம் வாழ்வாதார மாநாடு
- Periyapalayam
- வாழ்வாதார மாநாடு
- விவசாயிகள் சங்கம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- பெரியபாளையம்
ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. பெரியபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மண், மனிதன், மாடு, வீடு, வாழ்வுரிமை பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் முப்போகம் விளையக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை டிட்கோ நிறுவனம் எடுப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
சங்கத்தின் மாநில செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், அறிவுசார் நகரம் அமைக்க பெரியபாளையம் பகுதியில் 1200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளுக்கு சொந்தமான நெல், சிறுதானியங்கள் விளையக்கூடிய நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ஆபத்தான போக்கு என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய திட்டங்களை நிறைவேற்றுவது கண்டிக்கத்தக்கது. திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நிலம் கையகப்படுத்தப்படாது என அறிவித்த நிலையில், தற்போது அதற்கு மாறாக நிலத்தை கையகப்படுத்தும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து, விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள தரிசு நிலங்கள் உள்ள இடத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றார். பின்னர் மாநாட்டில், அறிவுசார் திட்டத்திற்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் அக் 3ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
The post பெரியபாளையத்தில் விவசாயிகள் சங்கம் வாழ்வுரிமை மாநாடு appeared first on Dinakaran.