×

மதுரை ரயில் தீபிடித்ததில் 9 பேர் பலியான விவகாரம் ஐஆர்சிடிசி ஊழியர்கள் 5 பேர் கைது: நாகர்கோவிலில் சட்டவிரோதமாக வாங்கிய சிலிண்டரில் கசிவால் விபத்து

மதுரை: மதுரையில், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானது தொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவன ஊழியர்கள் 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17ம் தேதி ஆன்மிக சுற்றுலா வந்த ரயில் 26ம் தேதி மதுரையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் விதிகளை மீறி பயன்படுத்திய காஸ் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். இந்த தீவிபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், விபத்திற்கு காரணமான ஐஆர்சிடிசி நிறுவன உதவியாளரான உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த தீபக் (23), சமையல் உதவியாளர் பிரகாஷ் ரஷ்தோகி (47), உதவியாளர் சுபம் கஷ்யப் (19), பாசின் சுற்றுலா நிறுவன வழிகாட்டி நரேந்திரகுமார் (61), சமையலர் ஹர்திக் சஹெனே (24) ஆகிய 5 பேர் மீதும் கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்த பிரிவு 304 (2), மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதான இந்திய தண்டனை சட்ட பிரிவு 285 மற்றும் ரயில்வே சட்டப்பிரிவு 164 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 5 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குப்பின் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ரயில்வே போலீசார் கூறும்போது, ‘‘உத்திரப்பிரதேசத்தில் இருந்து சுற்றுலா புறப்பட்டபோது சட்டவிரோதமாக 2 காஸ் சிலிண்டர்கள், காஸ், மண்ணெண்ணெய், விறகு அடுப்புகள் 15, நிலக்கரி மூட்டை, 30 லிட்டர் மண்ணெண்ணெய், கட்டுக்கட்டாக விறகு உள்ளிட்டவை கொண்டு வந்துள்ளனர். சுற்றுலா நிறுவன ஊழியர்கள் நாகர்கோவிலில் சட்ட விரோதமாக காஸ் சிலிண்டர் ஒன்றை விலை கொடுத்து வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறு வாங்கப்பட்ட காஸ் சிலிண்டரில் கசிவு இருந்துள்ளது. அதனாலேயே இந்த பெரும் விபத்து நடைபெற்று உள்ளது என முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

ரயில் பெட்டி தீவிபத்து தொடர்பாக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி 2வது நாளாக மதுரையில் நேற்று விசாரணை நடத்தினார். ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சௌத்ரி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ரயில் தீவிபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சட்டவிரோதமாக விலை கொடுத்து ஒரு காஸ் சிலிண்டர் வாங்கியுள்ளனர். இந்த சிலிண்டர் வெடிப்பு தான் விபத்திற்கான பிரதான காரணம் என தெரியவந்துள்ளது. கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதனால் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. மேலும் லக்னோவில் இருந்தும் சிலரை அழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.

The post மதுரை ரயில் தீபிடித்ததில் 9 பேர் பலியான விவகாரம் ஐஆர்சிடிசி ஊழியர்கள் 5 பேர் கைது: நாகர்கோவிலில் சட்டவிரோதமாக வாங்கிய சிலிண்டரில் கசிவால் விபத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,train fire ,IRCTC ,Nagercoil Madurai ,Madurai train fire ,Nagercoil ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி