×

கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்: கூடுதலாக ரயில், பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை 4வது ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில் 7 மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும். நேற்றுமுன்தினமே இந்த மாறுதல் அமலுக்கு வந்தது. எனினும் பணி நாளான நேற்று தான் அதன் விளைவு தெரிந்தது. சிந்தாதிரிப்பேட்டை ரயில்நிலையமே மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இதனால் பயணிகள் தவித்தனர். நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில் மற்றும் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் தொடங்கி உள்ளது. இதனால், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை 27ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டது. ரயில் பயணிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிபேட்டை- வேளச்சேரி, மற்றும் வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. நேற்று முன்தினம் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை.

ஆனால் பணி நாளான நேற்று தான் அதன் தாக்கம் தெரிந்தது. வேலை, எக்ஸ்பிரஸ் ரயில்கள், மருத்துவமனைகள் உள்பட பல்வேறு இடங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் ஒரே நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் ரயில் நிலையம் திக்குமுக்காடிப் போனது. காலை முதலே படிப்படியாக கூட்டம் அதிகரித்தது. 8 மணிக்கெல்லாம் பிளாட்பாரம் முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய ரயில்களிலும் அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரக்கூடிய ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ரயில் வருகிறது. மொத்தம் 80 ரயில்கள் தான் இயக்கப்படுகிறது. மேலும் கடற்கரை, கோட்டை, பூங்கா நகர் ரயில் நிலையங்களில் இருந்து பயணிப்பவர்கள் கூட நேற்று சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எனவே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரயில் சேவை மாற்றத்தையொட்டி மாநகர பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன.

பிராட்வேயில் இருந்து சித்தாதிரிப்பேட்டை வழியாக 2,436 சேவைகளும், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கத்தில் இருந்து பிராட்வேவுக்கு 2,436 சேவையும் வழக்கமாக இயக்கப்படுகின்றன. இதை விட கூடுதலாக நேற்று 140 சேவைகள் இருபுறமும் இயக்கப்பட்டன. ஆனாலும் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ரயிலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இறங்கி வருகின்றனர். ஆனால் போதுமான அளவு பேருந்துகள் இல்லை. ரயில் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்தவுடன் அதில் இருந்து இறங்கி வரும் பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

* ஏன் இப்படி ஆச்சு?
பஸ் போக்குவரத்துக்கு தூங்கா நகரமாக விளங்கிய சென்னை தற்போது இரவு 9.30 மணிக்கே முடங்கிவிடுகிறது. இரவு 12 மணி வரையிலும் தங்கு தடையின்றி ஒன்றன் பின் ஒன்றாக பாரிமுனை, சென்ட்ரல், பெரம்பூர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பஸ்கள் இயங்கி கொண்டே இருந்தது அந்தக்காலம். கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இரவு வேளையில் சாலையில் பஸ் சேவையை பார்க்கவே முடிவதில்லை. சென்னை மயிலாப்பூரில் பல்வேறு தொழில்நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்கி வருகின்றன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்ப பஸ் மற்றும் ரயில் சேவையை நம்பி இருக்கிறார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல், பெரம்பூர் செல்ல பஸ் சேவையே இருப்பதில்லை.

தற்போது பறக்கும் ரயில் சேவையும் சிந்தாரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, பெசன்ட்நகரில் இருந்து பெரம்பூர் வரை இயங்கும் தடம் எண் 29சி, திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரை இயங்கும் பஸ் தடம் எண் ஏ1, மந்தைவெளியில் இருந்து பாரிமுனை செல்லும் தடம் எண் 21 ஆகிய பஸ் சேவைகளை வழக்கம் போல் இரவு 11 மணிக்கு மேல் வரை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்: கூடுதலாக ரயில், பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chindathiripet Railway Station ,Chennai ,Chennai Beach ,Egmore ,Velachery ,
× RELATED சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை பகுதியாக ரத்து