×

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலம்: சென்னையில் விடுமுறை அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருவதையடுத்து சென்னை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் வந்து மக்கள் நன்றாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை. மகாபலி சக்கர வர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.

கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 16ம் தேதி பணி நாளாக இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

அதேபோன்று, சென்னையிலும் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். வணிகம் தொடர்பாகவும், வேலை சம்பந்தமாகவும் அதிக அளவில் இருப்பதால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், இன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் (29ம் தேதி) சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

The post நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலம்: சென்னையில் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Chennai ,Onam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...