
டெல்லி: வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இளவரசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்து திருமண சட்டப்பிரிவு 7(A)ன் கீழ், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டாலும், தனது மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக தங்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கறிஞர்கள் தம்பதியினருக்கு சுயமரியாதை திருமண சான்றிதழை வழங்கியதையும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது என சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்து திருமண சட்டத்தில் 7ஏ என்ற பிரிவை சேர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டத்தின் 7ஏ பிரிவை மேற்கோள் காட்டி அறையில் நடந்த திருமணம் செல்லும். சுயமரியாதை திருமணங்களை பலர் அறிய நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பு, பாதுகாப்பு கருதி பகிரங்கமாக மணம் முடிப்பதை மணமகன், மணமகள் தவிர்க்கக் கூடும். சிக்கலான சூழலில் பகிரங்கமாக திருமணம் நடத்த கட்டாயப்படுத்துவது மணமக்கள் உயிருக்கு ஆபத்தாகி விடலாம்.
எனவே பகிரங்கமாக திருமணம் நடத்தப்பட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்பு தவறானது. திருமணம் என்றால் பகிரங்கமாக தான் நடக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரியல்ல. குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாகக் கூட அனைவரும் அறிய திருமணம் செய்வதை மணமக்கள் தவிர்க்க கூடும். தங்களை பிரித்து விடுவார்களோ, தாக்கப்படுவோமோ என்று கூட மணமக்கள் அஞ்சி பகிரங்கமாக மனம் முடிப்பதை தவிர்க்கக் கூடும். பாண்டியன் என்பவரின் வழக்கில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு அரசியல் சட்டப்பிரிவு 21 அளிக்கும் உரிமையை மீறுவதாகும். மணமக்கள் தங்கள் இணையரை தேடிக் கொள்வது அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையாகும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
The post வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.