×

வடசேரி பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை: மீறினால் அபராதம் விதிக்க முடிவு

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மிக முக்கிய பஸ் நிலையமாக வடசேரி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். சமீப காலமாக பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன்கள், பணம், நகைகள் திருடப்படுகின்றன. இதே போல் குடிபோதையில் இருப்பவர்களை குறி வைத்தும் ஒரு கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. வடசேரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தல் சம்பவமும் அரங்கேறியது. பஸ் நிலையத்தில் நடக்கும் குற்ற செயல்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தன.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்துக்குள் பைக், கார், ஆட்டோக்கள் தாறுமாறாக வந்து சென்றன. பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகளின் முன்புறமும் பைக்குகள், கார்கள், ஆட்ேடாக்கள் நின்றன. இதனால் பஸ்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. வாலிபர்கள் சிலர் பைக்குகளில் பஸ் நிலையத்துக்குள் ரேஸ் செல்வது போல் வேகமாகவும் சென்றனர்.
இதை பார்த்ததும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் அதிர்ச்சி அடைந்தார். பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் மாநகராட்சி மேயர் மகேசுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் பேரில் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதித்து நடவடிக்கை எடுக்கவும் மேயர் மகேஷ் முடிவு செய்தார். தற்போது பஸ் நிலையத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணித்து, பஸ் நிலையத்துக்குள் நுழையும் தனியார் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இது தொடர்பான எச்சரிக்கை பலகை, வடசேரி பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என கூறி உள்ளனர்.

எனவே பஸ் நிலையத்துக்கு உறவினர்கள், குடும்பத்தினரை அழைத்து வருபவர்கள் பஸ் நிலையத்துக்கு வெளியே தான் இறக்கி விட வேண்டும். வயதானவர்கள், மாற்று திறனாளிகளாக இருந்தால் மட்டும் பிளாட்பாரம் வரை வரலாம். அவர்களும் உடனடியாக வாகனத்தை எடுத்து சென்று விட வேண்டும். பஸ் நிலையத்துக்குள் கடை வைத்துள்ளபவர்களும், தங்களது வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் பார்க்கிங் செய்ய கூடாது என போலீசார் கூறி உள்ளனர். எச்சரிக்கையை மீறி பஸ் நிலையத்துக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு, ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

The post வடசேரி பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நுழைய தடை: மீறினால் அபராதம் விதிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Vadseri bus station ,Nagargo ,Kumari District ,Dinakaran ,
× RELATED பைக்கில் சென்று உரசி மாணவிகளிடம் சில்மிஷம்: வாலிபருக்கு தர்மஅடி