×

நெய்வேலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஆய்வுசெய்ய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு..!!

நெய்வேலி: நெய்வேலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. தமிழகத்தின் கடலூரில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனை (என்எல்சி) சுற்றியுள்ள கிராமங்களில் மண், நீர் மற்றும் காற்று ஆகியவை கடுமையாக மாசுபட்டுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தோல், சிறுநீரகம், சுவாசம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் உள்ள சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக செயலிழக்கச் செய்வதற்கான திட்டத்தை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. என்எல்சியை இயக்குவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வை, சென்னையைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்களும், நீர் மற்றும் எரிசக்தி பிரச்சினைகளை ஆய்வு செய்து கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மந்தன் அத்யாயன் கேந்திராவும் இணைந்து நடத்தியது. இதில் நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் உள்ள சுரங்கங்கள், அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இரு இடங்களிலும் நீர்நிலைகள், நிலத்தடி நீர், வேளாண் நிலம் அதிக அளவில் ரசாயனம், கன உலோகங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜமாணிக்கம் உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

The post நெய்வேலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஆய்வுசெய்ய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Neyveli ,Neyveli Lignite ,Cuddalore, Tamil Nadu ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு