×

நாளை ஓணம் பண்டிகை கோலாகலம்: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் அம்மக்களால் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இந்த ஓணம் பண்டிகை உணர்த்துகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:மலையாளப் பெருமக்கள் சமத்துவம், சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்கள் மீது மன்னன் கொண்டுள்ள அன்பையும், மன்னன் மீது மக்கள் கொண்டுள்ள நன்றிக் கடனையும் ஓணம் திருநாள் வெளிப்படுத்துகிறது. ஒரு நாடும், அதன் மக்களும் மகிழ்ச்சியாகவும், துன்பங்களைத் தொலைத்து இன்பமாக வாழ்வதற்கான இலக்கணத்தையும் ஓணம் திருநாள் வரையறுத்துள்ளது. அந்த இலக்கணத்தை பின்பற்றினால் வாழ்வில் இன்பமே நிறையும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:இந்த சிறப்பு மிக்க நாளில், தமிழ்நாட்டில் வாழும் மலையாளம் மொழிப் பேசும் மக்களுக்கும் மற்றும் கேரளா மாநிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: ஓணம் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும் திருநாள். தமிழர்களின் கலாச்சாரமே எல்லோரும், எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பது தான். ஓணம் திருநாள் வலியுறுத்துவதும் அதை தான். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான் ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தி.

சமக தலைவர் சரத்குமார்:ஓணம் பண்டிகையை தமிழர்களும் கூடி கொண்டாடி மகிழும் வகையில் அண்டை மாநிலத்துடன் நட்புறவில் சிறந்து விளங்கி வருகிறோம். இந்த இனிய திருவோண திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: அரசனோ அரக்கனோ யாராக இருந்தாலும் ஆணவத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை மகாபலி சக்ரவர்த்தியின் வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. கேரள மக்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் இந்நன்நாளில், சாதி மதங்களை கடந்து அனைவரும் சமூக நல்லிணக்கதோடு சகோதரர்களாக வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்: ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா. இத் திருவிழா கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

The post நாளை ஓணம் பண்டிகை கோலாகலம்: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Oenam ,Oonam Festive Day ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...