
*போலீசார் சமரசம்; வேலூரில் பரபரப்பு
வேலூர் : வேலூர் காகிதப்பட்டறையில் மூதாட்டியை தாக்கியதில் இறந்ததாக புகார் தெரிவித்து, கொலை வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராதாம்மாள்(73). இவர் காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பியவர் வீட்டின் முகப்பில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ அடையாளம் தெரியாத வாலிபர் ராதம்மாளை தாக்கி விட்டு அவரது மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.
படுகாயம் அடைந்த ராதாம்மாள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து ராதாம்மாளின் மகன் ஜெயக்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராதாம்மாள் இறந்து விட்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அவரை தாக்கியதாக கூறப்படும் சத்துவாச்சாரி வஉசி நகரை சேர்ந்த சக்திவேலை அழைத்து விசாரித்தனர்.
பின்னர், அந்த வாலிபரை போலீசார் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மூதாட்டியை தாக்கியதால்தான் அவர் இறந்துள்ளார். போலீசார் கொலையாளியை காப்பாற்ற முயல்வதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு காகிதப்பட்டறையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மூதாட்டியின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மூதாட்டியின் உறவினர்கள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக புகார் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.