×

மயான சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேந்தமங்கலம் : செல்லப்பம்பட்டி மயானம் செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில், கோழி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி, புள்ளப்ப நாயக்கனூர் ஆகிய கிராமத்திற்கு சொந்தமான மயானம் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கிழக்குபுரத்தில் அமைந்துள்ளது.

இதற்காக புள்ளப்பநாயக்கனூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கும் கீழ் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 கிராமத்தை சார்ந்தவர்களும், இறந்தவர்களை இந்த சாலையின் வழியாக எடுத்து வந்து, இங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்வார்கள். தற்போது இந்த சர்வீஸ் சாலையின் ஓரத்தில் செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, பொம்மைகுட்டைமேடு ஆகிய பகுதிகளில் இருந்து, கோழி இறைச்சி கடைகள் நடத்துபவர்கள் கடைகளில் உள்ள கோழிக்கழிவுகளையும் மூட்டையாக கட்டி, மயான சாலையில் போட்டு செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள் சென்று வருகின்றனர். சாலையின் ஓரத்தில் கோழியின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதால், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயான சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Chenthamangalam ,Pellapatti Mayanam ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...