×

கல்லணை வாய்க்கால் அருகே குப்பை கிடங்கு கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அவலம்

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : துவரங்குறிச்சி முக்கூட்டு சாலை பகுதியில் கல்லணை வாய்க்கால் அருகே குப்பை கிடங்கு இருப்பதால் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அவல நிலை உருவாகி இருக்கிறது. குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது துவரங்குறிச்சி ஊராட்சி. இது ஊராட்சியாக இருந்தாலும் தாமரங்கோட்டை, மண்ணாங்காடு, காசாங்காடு, அணைக்காடு, ராசியங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக துவரங்குறிச்சி பகுதிக்கு தான் வர வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு துவரங்குறிச்சி ஒரு சிறிய நகர் பகுதியாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் இருக்கும் முக்கியமான பகுதியில் இந்த ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த குப்பை கிடங்கையொட்டி கல்லணை கால்வாய் செல்கிறது. இந்த வாய்க்காலில் இப்போது விவசாயம் மற்றும் ஏரி குளங்களை நிரப்புவதற்காக கொண்டு செல்லப்படும் காவிரி ஆற்று தண்ணீர் செல்லும் நிலையில் இந்த குப்பை கிடங்கில் இருந்த கழிவுகள் ஆற்றில் கலந்து தற்போது அந்த தண்ணீர் மாசுபட்டு வருகிறது.

அத்தோடு இந்த குப்பை கிடங்கின் அருகே மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ள நிலையில் இதில் இருந்து வரும் துர்நாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்யும் பலதரப்பட்ட வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.இது தொடர்பாக இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் தெரிவித்தும் இதுநாள் வரை அந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது வெயில் காலம் என்பதால் தொற்று நோய் அதிகம் பரவாமல் இருந்து வருகிறது. இனிவரும் காலம் மழை காலம் என்பதால் தொற்று நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக குப்பை கிடங்கை குடியிருப்பு பகுதிகள் இல்லாத வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

The post கல்லணை வாய்க்கால் அருகே குப்பை கிடங்கு கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thurangaruchichi Tripod Road ,Garbage ,Warehouse ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...