×

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயில் மிதக்கும் தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள்

*தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயில் மிதக்கும் தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் கையாள திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளது. இருப்பினும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவது, கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவது என்று விதிமீறல்கள் தொடர்ந்து வருகிறது. மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் ஊற்றுநீரும், மழைநீரும் கானாறுகளாக உருவெடுத்து ஒரு காலத்தில் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு பெரிதும் உதவின.

இவ்வாறு காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, பில்டர்பெட் சாலை, ஓல்டு டவுன், வேலப்பாடி, சங்கரன்பாளையம், விருபாட்சிபுரம் என்று வரிசையாக மழைநீரையும், ஊற்றுநீரையும் கொண்டு வரும் கானாறுகள் நகருக்கு நிலத்தடிநீராதாரம் மட்டுமின்றி நகருக்கு அழகையும் கூட்டியிருந்தன. ஆனால் நாளடைவில் இந்த கானாறுகள் அந்தந்த பகுதி குடியிருப்புகளின் கழிவுநீரை சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. இவ்வாறு சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை கானாறுகள் கழிவுநீர் கானாறுகளாக உருமாறின. அதேபோல் பில்டர்பெட் சாலையை ஒட்டி அமைந்திருந்த 30 அடி அகல கானாறு தற்போது சிறு கழிவுநீர் கால்வாயாக ஆக்கிரமிப்பாளர்களால் மாறியுள்ளது.

அதேபோல் சலவன்பேட்டை, குட்டைமேடு, ஓல்டு டவுன், ஜிபிஎச் சாலை வழியாக வந்து வேலப்பாடி, சங்கரன்பாளையம் நிக்கல்சன் கால்வாயோடு நேதாஜி ஸ்டேடியத்துடன் இணையும் கழிவுநீர் கானாறு தொடர்ந்து வசந்தபுரம் கழிவுநீர் கானாறுடன் சேர்ந்து மாங்காய் மண்டி முள்ளிப்பாளையம், பழைய பைபாஸ் சாலை வழியாக சென்று பாலாற்றில் கலக்கிறது.

இவ்வாறு செல்லும் நிக்கல்சன் கால்வாயில் தெர்மோகோல் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், பழுதடைந்த கழிக்கப்பட்ட டியூப் லைட்டுகள் உட்பட மின்சாதனங்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் உட்பட பிளாஸ்டிக் கழிவுகள், பாய்கள், தலையணைகளை சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தூர்வாரி, கானாறுகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயில் மிதக்கும் தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Nicholson Canal ,Mangai Mandi ,Vellore ,Durwara ,Mangai Mandi, ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...