×

நீலகிரி வனக்கோட்டத்தில் அந்நிய மரங்கள் அகற்றம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் விறகு டேன்டீக்கு ஒதுக்கீடு

*மாவட்ட வன அதிகாரி தகவல்

ஊட்டி : நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனங்களில் இதுவரை சுமார் 395 ஹெக்டர் பரப்பளவில் அந்நிய மரங்களான கற்பூரம் மற்றும் சீகை அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கிடைக்க பெற்ற 15 ஆயிரம் மெட்ரிக் டன் விறகுகள் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் காடுகளில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்கின்றன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1840-களில் எரிபொருள் தேவைக்காக கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், உண்ணி, பார்த்தீனியம், லேண்டானா, கார்ஸ் முள் செடி, செஸ்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு தாவரங்கள் நடவு செய்யப்பட்டன.

தற்போது நீலகிரியில் இவை சுமார் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கும் மேல் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை பொழிவையும் வெகுவாக பாதித்தன. மேலும் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி போன்ற செடிகள் ஆக்கிரமித்தால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. விலங்குகளுக்கு உணவான புற்கள், செடி-கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்தன. இதனால் விலங்குகளுக்கு உணவு பற்றக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சூழலும் உருவானது.

நீலகிரியின் வன வளத்தை பாதுகாக்கும் வகையில் 1988-ம் ஆண்டு வனக்கொள்கை தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி நீலகிரியில் வெளிநாட்டு மரங்கள், தாவரங்கள் பயிரிட தடை விதிக்கப்பட்டது. நீலகிரி வனங்களில் வெளிநாட்டு செடிகளை அகற்றி விட்டு அதற்கு பதிலாக இந்தியாவை தாயகமாக கொண்ட மரங்கள், செடிகளை புல்வெளிகளை உருவாக்கவும், சோலைகளையும், புல்வெளிகளையும் பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர அந்நிய களை தாவரங்களை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் கற்பூரம் மற்றும் சீகை உள்ளிட்ட அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நீலகிரி வனக்கோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 395 ஹெக்டர் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்பட்ட அந்நிய மரங்கள் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் (டேன்டீ) தேயிலை தொழிற்சாலைகளின் விறகு தேவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் நீலகிரி வனக்கோட்டத்தில் அகற்றப்பட்ட 15 ஆயிரம் மெட்ரிக் டன் அந்நிய மர விறகுகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விறகுகளை பயன்படுத்தி தேயிலை தூள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ‘‘நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 394.55 ஹெக்டர் பரப்பளவில் அந்திய மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள பகுதிகளில் உள்ள இந்த தாவரங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு அகற்றப்பட்ட அந்நிய மரங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற 15 ஆயிரம் மெட்ரிக் டன் விறகுகள் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

The post நீலகிரி வனக்கோட்டத்தில் அந்நிய மரங்கள் அகற்றம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் விறகு டேன்டீக்கு ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Dandee ,Nilgiri forest ,District Forest Officer ,Ooty ,Nilgiri Forest Reserve ,
× RELATED சின்கோனா பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழப்பு