×

காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் ஊராட்சியில் ஹாக்கி போட்டிகளில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

*பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டு

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் ஊராட்சியில் ஹாக்கி போட்டிகளில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாற்கடல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் திருப்பாற்கடல், அத்திப்பட்டு, காவேரிப்பாக்கம், ராமாபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இங்கு பயிலும் மாணவர்கள் கல்வியுடன் ஹாக்கி விளையாட்டு போட்டியிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு விடுதி 2022-23-ஆம் ஆண்டிற்கான, மாணவர் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம்தேதி நடைபெற்றது. இந்த தேர்வு சென்னை, ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, அரியலூர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நடைபெற்றது.

இதில் 6,7,8,9, மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு சேர்க்கைக்கான உடற் திறனாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அப்போது தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கபடி, கால்பந்து, வாள்வீச்சு, உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களும், தடகளம், கிரிக்கெட், வாள்வீச்சு, கால்பந்து, கூடைப்பந்து, வளைக்கோல்பந்து, கையுந்துபந்து, உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி மாணவர்களும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

இதில் காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஹாக்கி போட்டியில் மாவட்ட அளவில் தேர்வாகி இருந்தனர். இந்த மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு விடுதிக்கான உடற் திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 6ம் வகுப்பு மாணவர்கள் பேரரசு, சந்தோஷ், சரண், ஆகிய மூன்று மாணவர்கள் தேர்வாகி மதுரையில் தங்கி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கடந்த மே மாதம் தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டுத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டிக்கு 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சென்னையில் ஒரு மாணவனும், மதுரையில் 3 மாணவர்களும், திருச்சியில் 2, மாணவர்களும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17ம் தேதி 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 18 மாணவர்கள் கலந்து கொண்டு வட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றனர். இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 18 மாணவர்கள் கலந்து கொண்டு வட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

இதனையடுத்து அந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன், தேவராஜ் ஹாக்கி அகடமி நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

The post காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் ஊராட்சியில் ஹாக்கி போட்டிகளில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Tirupalakadal panchayat ,Kaveripakkam ,Tiruppalakadal Panchayat ,Tiruppalakadal ,Panchayat ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...