×

தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருக தனி கவனம் முகாம்கள் மூலம் தனியார் துறையில் 1.59 லட்சம் இளைஞர்களுக்கு வேலை

*அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை : தமிழ்நாடு அரசு நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், 1.59 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்புத்துறை, ஊரக வாழ்வாதாரம் ஆகியவை இணைந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. அதில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமிற்கு, கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வரவேற்றார்.

விழாவில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழ்நாட்டில் தொழில் வளத்தை மீட்கவும், தொழில் வளர்ச்சியை பரலாக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வெளி நாடுகளில் இருந்து ₹17,141 கோடி முதலீடுகளை கொண்டுவந்தார்.

அதன்மூலம், 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.அதைதொடர்ந்து, ₹1,880 கோடி முதலீடுகளை ஈர்த்து, 39,180 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், கோவையில் முதலீட்டார்கள் மாநாடு நடத்தி ₹35,208 கோடி முதலீடுகள் பெற்று 76,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்த தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. படிப்புக்கு தகுந்த வேலைகளை பெற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், கல்லூரிகளில் பாடத்திட்ட்ங்களை மாற்றியிருக்கிறோம்.படித்த அனைவருக்கும் நேரடியாக அரசு வேலைவாய்ப்புகளை தருவதற்கு பொருளாதாரம் இடம்தரவில்லை. எனவே, வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக, அரசு சலுகைளை அளித்து தொழிற்சாலைகள் தொடங்க ஊக்கப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள், இந்த மாநிலத்தை சேர்ந்த 75 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வித்தகுதிக்கு உரிய நியாயமான ஊதியம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைத்தேடி தொழிற்சாலைகளை நோக்கி சென்ற நிலை மாறி, தொழிற்சாலைகள் நம்மை தேடி வரும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2ஆண்டுகளில் 101 பெரிய மற்றும் 1258 சிறிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில், சுமார் 7 லட்சம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். அதன்மூலம், 1 லட்சத்து 59 ஆயிரத்து 868 பேர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். குறிப்பாக, 2522 மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 2பெரிய மற்றும் 33 சிறிய அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம், 3,410 பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகள் இல்லாத திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டுவந்தவர் கலைஞர். எனவே, அவரது நூற்றாண்ைட முன்னிட்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, இந்த மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக தேவையான இடங்களில் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, 147 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹12.48 கோடி வங்கி கடனுதவி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியமாக 51 நபர்களுக்கு 1.54 கோடியையும் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

விழாவில், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்க துணைத் தலைவர் இரா.தரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், துரை.வெங்கட், த.ரமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருக தனி கவனம் முகாம்கள் மூலம் தனியார் துறையில் 1.59 லட்சம் இளைஞர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,A.V.Velu ,Thiruvannamalai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...