×

முதன்முறையாக நடந்தது கடலூர் கடற்கரையில் மகிழ்ச்சி திருவிழா

*ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ¿ஏராளமானோர் பங்கேற்பு

கடலூர் : கடலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஃபன் ஸ்ட்ரீட் கேளிக்கை நிகழ்ச்சி முதன்முறையாக நடத்தப்பட்டது. இதில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முதன் முறையாக கடலூர் மாவட்ட நிர்வாகம் நடத்தியது.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். கடலூர் எம்எல்ஏ ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், எஸ்பி ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகர திமுக செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மாணவர் அணி பாலாஜி, தகவல் தொழில்நுட்பம் கார்த்தி, பிரவீன், மாமன்ற உறுப்பினர்கள் கிரேசி, ஆராமுது, சுபாஷினி ராஜா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், நடனம், பாடல், விளையாட்டு, நாய் கண்காட்சி, அறிவுசார் திறன் வெளிப்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் மேம்படுத்தல் என பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் காலை 6 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 9 மணி கடந்தும், திரண்டிருந்த இளைஞர்கள், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10 மணி வரை நடைபெற்று முடிவடைந்தது.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் உறுதி மொழியை ஏற்றனர். இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட நிகழ்ச்சி கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

The post முதன்முறையாக நடந்தது கடலூர் கடற்கரையில் மகிழ்ச்சி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Beach ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...