×

மழை பொய்த்து போனதால் சாம்பவர்வடகரை பகுதியில் பீட்ரூட் விளைச்சல் குறைவு

*விலையும் இல்லாததால் விவசாயிகள் வேதனை

சுரண்டை : சாம்பவர்வடகரை பகுதியில் ஓணம் பண்டிகைக்காக விவசாயிகள் பீட்ரூட் பயிரிட்டிருந்த நிலையில் மழை பொய்த்து போனதால் விளைச்சல் குறைந்து விட்டது. விலையும் இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தென்னை, மா, பலா, வாழை மற்றும் காய்கறி வகைகள் அனைத்தும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படுபவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சாம்பவர்வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பீட்ரூட் பயிரிட்டிருந்தனர். கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்துகளை உள்ளடக்கிய பீட்ரூட், கொழுப்பை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. பள்ளி மாணவர்களுக்கான உணவு பட்டியலில் பீட்ரூட் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது பீட்ரூட்டின் தேவை அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளாவிற்கும் பீட்ரூட் அனுப்பப்படுகிறது. குறைந்தபட்சம் பீட்ரூட் விளைச்சலுக்கு 50 முதல் 60 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

ஏக்கருக்கு 10 டன் முதல் 12 டன் வரை பீட்ரூட் விளைகிறது. கிலோ ரூ.10 முதல் 15 வரை பீட்ரூட் விற்கப்படுகிறது. இந்தாண்டு மழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது.
குறைவான அளவில் மட்டுமே பீட்ரூட் பயிரிடப்பட்டும் போதிய அளவில் விலையும் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஓணம் திருவிழாவிற்கு பின்பு பீட்ரூட்டிற்கு அதிக விலை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு மழை இல்லாததால் பீட்ரூட் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. அதே நேரத்தில் பீட்ரூட்டிற்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் சாகுபடிக்காக போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும் ஓணம் திருவிழாவிற்கு பிறகு பீட்ரூட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சாம்பவர்வடகரையில் உள்ள கருங்குளம் மற்றும் வண்ணான் குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் கருங்குளத்திற்கு வரக்கூடிய புதிய கால்வாய் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post மழை பொய்த்து போனதால் சாம்பவர்வடகரை பகுதியில் பீட்ரூட் விளைச்சல் குறைவு appeared first on Dinakaran.

Tags : Sampavarwatakarai ,Onam festival ,Sampawarwatkarai ,
× RELATED சாம்பவர்வடகரையில் இறகுபந்து மைதானம்,...