×

குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர்

உலகின் அரிய பொக்கிஷமாகத் திகழும் பெரிய கோயிலை உருவாக்கியவன் சோழ மன்னன் ராஜராஜ சோழன் என்பது உலகறிந்த செய்தி. இதே காலத்தில் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை பிராட்டியார் அதே கலைநயத்துடன் எழுப்பியுள்ள கலைப் பொக்கிஷமான சிவாலயம் ஒன்று எந்தவித சிதைவுமின்றி புதுப்பொலிவுடன் ஊர்மக்களின் உள்ளார்ந்த பராமரிப்பில் சிறப்பாகத் திகழ்ந்து வருவது வியக்க வைக்கும் தகவல். அந்தக் கோயில் அமைந்திருக்கும் தலம், தாதாபுரம்.
தாதாபுரத்தின் புராதனப் பெயர் ராஜராஜபுரம்.

‘வெண்குன்றக் கோட்டத்தின் நல்லூர் நாட்டின் ராஜராஜபுரம்’ எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வூர் தற்போது தாதாபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் மருவியதற்கான காரணம் தெரியவில்லை. ஆலயத்தில் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. சுமார் நூறு வருடங்களுக்கு முன் இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கையின் மூலம் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இவ்வூரின் ஆலயங்கள் பற்றியும், இவ்வாலயங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றியும் அறிய முடிகிறது.

தற்போது ‘காமாட்சி உடனாய மாணிக்கேஸ்வரர் கோயில்’ என்றழைக்கப்படும் இவ்வாலயம், பழங்காலத்தில் மணிகண்டேஸ்வரர் கோயில் என்று மட்டுமே அறியப்பட்டு வந்தது. கோயிலின் பலிபீடம், நந்தி மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என அனைத்தும் கருங்கற்களைக் கொண்டு கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளன.

நந்திதேவர் இறைவனை நோக்கிய வண்ணம் கம்பீரமாக வீற்றிருக்கிறார். முகமண்டபம், மகாமண்டபத்தின் முன்புறமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தை அடைய வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் ஏழு படிகள் உள்ளன. வாயிலின் இருபக்கங்களிலும் யாளியின் முகம் வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த முகமண்டபத்தின் கூரை, உட்குவிந்த நிலையில் மடிப்புகளுடன் காணப்படுகிறது. இரு வரிசைகளில் பிரமாண்டமான நான்கு தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன.

மகா மண்டபத்தில் இடைநாழிக்குச் செல்லும் வாயிலின் இருபுறங்களிலும் துவார கணபதியும், ஆறுமுகரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். வடகிழக்குப் பகுதியில் வெளிவாயில் கதவுக்கு உட்புறமாகச் சந்திரன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், சதுர வடிவக் கருவறையில் மூலவர் பிரமாண்டமாக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். வட்ட வடிவமான ஆவுடையார் மீது அமைந்துள்ள இந்த சிவலிங்கமே மாணிக்கேஸ்வரர். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் அமைந்துள்ளன.

மகா மண்டபத்தின் நடுவே தென்திசையை நோக்கிய வண்ணம் மாணிக்கவல்லி சந்நதி அமைந்துள்ளது. நான்கு கைகளுடன் காணப்படுகிறார் அம்மன். மேல் வலக்கை அங்குசத்துடனும், கீழ்வலக்கை அபய முத்திரையுடனும், மேல் இடக்கை பாசக் கயிற்றுடனும், கீழ் இடக்கை வரத முத்திரையுடனும் அமைந்துள்ளன. இந்த அம்மன் சிற்பமானது, கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சி நாயக்கர் கலைப்பாணி என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டில் காமாட்சி என்ற பெயர் காணப்படுகின்றது.

கணபதி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், சூரியன், காளையோடு நிற்கும் வீணாதரர், திருமால், துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சப்தமாதாக்கள், துவாரபாலகர்கள் என அனைத்துச் சிற்பங்களும் குந்தவை பிராட்டியாரின் சிற்பக்கலை ஈடுபாட்டைப் பறைசாற்றுகின்றன. கருவறைக் கோட்டத்தில் அமைந்துள்ள நர்த்தன கணபதி, கல் குடையுடன் காட்சி தருவது அபூர்வ கோலமாகும்.

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று சுவாமி – அம்மன் வீதியுலா மற்றும் ஆடிக்கிருத்திகையில் வள்ளி – தெய்வயானையுடன் முருகர் வீதியுலா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. திண்டிவனம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு வடமேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

The post குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Cholam Mannan ,Rajaraja Cholhan ,Joykeswari ,
× RELATED ராஜராஜ சோழன் கட்டுப்பாட்டில் இருந்த...