×

பழநி கோயிலில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

பழநி, ஆக. 28: பழநி கோயிலில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இம்மலைக்கோயிலில் பக்தர்கள் வீசி எறியும் உணவுகளை உட்கொள்ள குரங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. இந்த குரங்குகள் சில சமயம் பக்தர்கள் கொண்டு வரும் பிரசாத பைகள், பர்ஸ்கள் மற்றும் செல்போன் போன்றவற்றையும் பறித்துச் செல்கின்றன. இதனால் குரங்குகள் வனத்துறை மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டு வந்தன.

ஆனாலும், பழநி கோயிலில் குரங்குகளின் கூட்டம் குறையவில்லை. கடந்த வாரம் மலைக்கோயிலில் பக்தர் ஒருவரின் செல்போனை குரங்கு பறித்துச் சென்றது. கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதனை பக்தர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். இந்த செல்போன் பதிவு, தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக வனத்துறையினர் பழநி மலைக்கோயிலில் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் சுமார் 7 குரங்குகள் கூண்டுகளில் சிக்கி உள்ளன. பிடிக்கப்டட்ட குரங்குகளை வனத்துறையினர் கொடைக்கானல் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டு வருகின்றனர். வனத்துறையினரின் இந்நடவடிக்கையால் பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post பழநி கோயிலில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை appeared first on Dinakaran.

Tags : forest department ,Palani temple ,Palani ,Tamil Nadu ,
× RELATED பழநி கோயிலின் சார்பில் இயங்கி வந்த...