×

பழநி அருகே ஒர்க்ஷாப்பில் தீ விபத்து: பைக்குகள் எரிந்து நாசம்

 

பழநி, ஆக. 28: பழநி அருகே ராமநாத நகரில் ஒர்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பைக்குகள் எரிந்து நாசமாயின. பழநி அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பழநி புறநகர், ராமநாதன்நகரில் வாகன பைக் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை மதியமே பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கடையில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடையின் இரும்பு ஷட்டர் வெடித்து பழநி-பாலசமுத்திரம் பிரதான சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒர்க்ஷாப்பில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இவ்விபத்தில் கடையினுள் நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகள் மற்றும் காற்றடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து பழநி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழநி அருகே ஒர்க்ஷாப்பில் தீ விபத்து: பைக்குகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Ramanatha ,Dinakaran ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...