×

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா

 

திருவள்ளூர், ஆக. 28: ஆன்மீகப் புரட்சியாளராகவும் சமரச சன்மார்க்க ஞானியாகவும் விளங்கிய வள்ளலார் சுவாமிகள் பிறந்த 200வது ஆண்டு விழா, தருமசாலை தொடங்கிய 156 வது ஆண்டு விழா மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு விழா ஆகியவற்றை சேர்த்து முப்பெரும் விழாவாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கொண்டாடப்படும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (வேலூர்) ரமணி முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் (திருவள்ளூர்) சித்ராதேவி அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவிற்கு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி வள்ளலார் சுவாமிகளின் கருத்துக்களை அடியொற்றி அவரது கொள்கை நெறிகளை பரப்பிடும் சமரச சுத்த சன்மார்க்க சங்க பெரியோர்களை கௌரவித்தார். மேலும் வள்ளலார் சுவாமிகள் குறித்து மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் சமரச சுத்த சன்மார்க்க பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Vallalar 200th Jubilee ,Hindu Religious Charities ,Tiruvallur ,Vallalar Swami ,Vallalar 200 Triennial Celebration ,Hindu Religious Charities Department ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...