×

அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் வைப்பு நிதியில் ரூ.3.80 கோடி மோசடி: அலுவலக உதவியாளர் கைது

 

சென்னை, ஆக.28: காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 4 துறைகளில் சுமார் 1,000 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தனித்தனியே விடுதி வசதிகளும் உள்ளன. இந்நிலையில், இந்த கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விடுதியில் தங்கி படிப்பவர்களிடம் இருந்து பெறப்படும் வைப்பு நிதி, வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும். மாணவ, மாணவியர் 4 வருட பட்டப்படிப்பு முடித்தபிறகு அந்த பணம் மீண்டும் திருப்பித் தரப்படும்.

இந்த கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த அலுவலக உதவியாளர் பிரபு, மாணவ, மாணவியர்களிடம் பெற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்ததையடுத்து, கல்லூரி முதல்வர் கவிதா, கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டபோது, அவற்றில் சுமார் ரூ.3 கோடியே 80 லட்சத்தை பிரபு மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த பிரபு தலைமறைவானார். இந்த நிலையில் பிரபு ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஆந்திரா சென்ற போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரபுவை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

The post அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் வைப்பு நிதியில் ரூ.3.80 கோடி மோசடி: அலுவலக உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Anna University College of Engineering ,Chennai ,Chennai-Bengaluru National Highway ,Kanchipuram ,Ponnerikarai ,Anna University ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்