×

சிட்டீஸ் சிறப்பு திட்டத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.27 லட்சத்தில் கிரிக்கெட், கால்பந்து பயிற்சி: 6 நவீன பயிற்சி தளங்கள் தயார்

 

சென்னை, ஆக.28: சிட்டீஸ் சிறப்பு திட்டம் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.27 லட்சத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்டீஸ் என்ற சிறப்பு திட்டத்தின் வாயிலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, சில பள்ளிகளை தேர்ந்தேடுத்து, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மின் ஆளுமையாக மாற்றி அமைத்தல், கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், கலை, இலக்கியம், மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேம்படுத்த ரூ.95.25 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விளையாட்டு துறையில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை மேற்கொள்ள வரைவு திட்டத்தின் அடிப்படையில் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கால்பந்து பயிற்சி திட்டத்தில் 3 சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை உள்ளடக்கிய கால்பந்து அணிகள் உருவாக்கப்பட்டு, 60 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கபடும். 11 மாதங்களில் 80 நாட்களில் (வாரம் இருமுறை) பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து ஆடைகள் மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கபடும்.

இத்திட்டம் முதல் கட்டமாக 3 பகுதிகளில் தொடங்க உள்ளது. வடசென்னையில் பெரம்பூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மத்திய சென்னையில் சைதாப்பேட்டை மாநகரட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்சென்னையில் கோட்டூர் சென்னை உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. கிரேட் கோல்ஸ் என்ற நிறுவனம் இப்பயிற்சியை அளிக்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.8 லட்சம். கிரிக்கெட் பயிற்சி திட்டத்தில் அனைத்து சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வரைவு திட்டத்தின்படி கல்வி மாவட்ட வாரியாக தேர்வு செய்து, அதில் மிக திறமையான 30 மாணவர்களை கொண்ட சென்னை பள்ளிகள் கிரிக்கெட் அணி உருவாக்கப்படும்.

இப்பயிற்சி 12 மாதங்களில் 154 பயிற்சி நாட்களில் (வாரம் 3 முறை) கொடுக்கப்படும். இதில் 22 நாட்கள் போட்டிகளுக்கு ஒதுக்கப்படும். இதில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு மட்டை, பந்துகள், காலணிகள் மற்றும் அத்யாவசிய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். ஜெனரேஷன் நெக்ஸ்ட்ஸ் போர்ட்ஸ் அகாடமி என்ற நிறுவனம் இந்திய மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வினால் வழிக்காட்டப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.19 லட்சம். இதற்காக 6 நவீன பயிற்சி தளங்கள் நுங்கம்பாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உருவாக்கப்படுகிறது.

The post சிட்டீஸ் சிறப்பு திட்டத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.27 லட்சத்தில் கிரிக்கெட், கால்பந்து பயிற்சி: 6 நவீன பயிற்சி தளங்கள் தயார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation schools ,Municipal Corporation Schools ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...