×

வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்காவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்: உபி காங். தலைவர் கோரிக்கை

லக்னோ: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த உபி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். உபி மாநிலம், வாரணாசி மக்களவை தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் வாரணாசியில் அவர் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில்,புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் நேற்று கூறுகையில்,‘‘ மக்களவை தேர்தலில், வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை அனுப்பப்படும். பிரியங்கா காந்தி எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

அவரது வெற்றிக்கு நாங்கள் கடுமையாக உழைப்போம். மோடிக்கு எதிராக பலமான ஒரு வேட்பாளர் தேவை. அதற்காக பிரியங்காவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.அதே போல் அமேதி தொகுதி எம்பியான ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததாலும், அவரது செயல்பாடுகளாலும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே ராகுல் மீண்டும் போட்டியிட வேண்டும் என தொகுதியில் உள்ளவர்கள் விரும்புகின்றனர். மக்களவை தேர்தல் என்பது நாடு முழுவதும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் பாஜவுக்கு எதிரான வலுவான கட்சி என பார்க்கையில் காங்கிரஸ் தான் முக்கிய கட்சி. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதை போல் உபியிலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால், இதில் கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

The post வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்காவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்: உபி காங். தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varanasi ,Priyanga ,Modi ,Ubi Kong ,Lucknow ,UP Congress Committee ,Priyanka Gandhy ,Ubi ,Priyanaka ,President ,Dinakaran ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...