
புதுடெல்லி: எகிப்தில் தொடங்கி உள்ள முப்படைகளுக்கான ப்ரைட் ஸ்டார்-23 போர் பயிற்சியில் இந்திய விமானப்படை முதல்முறையாக கலந்து கொள்கிறது. இந்தியா, எகிப்து இடையே சிறப்பான உறவு, ஆழமான ஒத்துழைப்பு நிலவுகிறது. கடந்த 1960ம் ஆண்டுகளில் இரு நாடுகளும் இணைந்து ஏரோ-என்ஜின் மற்றும் விமானங்களை உருவாக்கின. எகிப்து விமானிகளுக்கு இந்திய வீரர்கள் பயிற்சிகளை அளித்தனர். எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தபோது இரு நாடுகள் இடையேயான உறவு உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த ஜுன் மாதம் எகிப்து சென்றபோது இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுப்பெற்றன. இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள், ரேடார்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்பட பிற போர் தளவாடங்களை வாங்க எகிப்து ஆர்வம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எகிப்தின் கெய்ரோ(மேற்கு) விமானப்படை தளத்தில் முப்படைகளின் ப்ரைட் ஸ்டார்-23 போர் பயிற்சி நேற்று(ஆக.27) தொடங்கி செப்டம்பர் 16 வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படைகளின் பல தரப்பு போர் பயிற்சிகளில் அமெரிக்கா, கிரீஸ், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சிகளில் இந்திய விமானப்படை முதல்முறையாக கலந்து கொள்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படையின் ஐந்து மிக்-29, இரண்டு ஐஎல்-78, இரண்டு சி-130, இரண்டு சி-17 ரக விமானங்கள் நேற்று எகிப்து புறப்பட்டு சென்றன. மேலும் இந்திய விமானப்படையின் கருட சிறப்பு படையினர் உள்பட 150 இந்திய ராணுவத்தினர் எகிப்து சென்றனர். இரு நாடுகளிடையே கூட்டு நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவைவே இந்த பயிற்களின் நோக்கம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
The post எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முப்படை கூட்டு பயிற்சியில் இந்தியா முதல்முறை பங்கேற்பு: 5 மிக்-29 ஜெட் விமானங்கள், 150 வீரர்கள் பயணம் appeared first on Dinakaran.