×

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் 10 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவில் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது ஐம்பொன்னால் ஆன 10 பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லாப் பிள்ளையார் கோயில் உள்ளது. கோயில் அருகே வசிக்கும் உத்ராபதி என்பவர் புதிதாக வீடு கட்டுவதற்காக நேற்று பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது ஏதோ உலோகம் சத்தம் கேட்கவே தோண்டி பார்த்த போது அடுத்தடுத்து 6 சுவாமி சிலைகள் கிடைத்தன. இத்தகவல் காட்டு தீ போல் பரவியது. அங்கு வந்த ஊராட்சி தலைவர் வாசுகி சோழன், தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சுவாமி சிலைகளை பார்வையிட்டனர்.

சிவன், பார்வதி, ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பீடத்துடன் பஞ்சமூர்த்தி, இடம்புரி விநாயகர் ஆகிய சிலைகள் இருந்தன. இதையடுத்து கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் அதிகாரிகள் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மேலும் பள்ளம் தோண்டி சிலைகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதையடுத்து நடராஜர், சோமஸ்கந்தர், நடன சம்மந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய 4 சிலைகள் கிடைத்தன. மேலும் சிலைகள் இருக்கிறதா என தொடர்ந்து பள்ளம் தோண்டப்படுகிறது. இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த சிலைகள் 300 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும் அவைகள் அனைத்தும் ஐம்பொன்னாலான பழமையான சிலைகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொல்லப் பிள்ளையார் கோயிலுக்கான சிலைகளாக கூட இது இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் கிராமத்தில் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடத்த வேண்டும்’ என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் 10 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Swami ,Kattumannar ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!