×

வரத்து அதிகரிப்பு காரணமாக காசிமேட்டில் மீன் விலை சரிவு: வஞ்சிரம் கிலோ ரூ.600, நெத்திலி ரூ.200, நண்டு ரூ.400க்கு விற்பனை, அசைவ பிரியர்கள் மீன்களை அள்ளி சென்றனர்

சென்னை: வரத்து அதிகரிப்பால் சென்னை காசிமேட்டில் மீன் விலை குறைந்தது. இதனால் அசைவ பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக, வஞ்சிரம் கிலோ ரூ.600, நெத்திலி ரூ.200, நண்டு ரூ.400க்கு விற்பனையானது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகளை சமைப்பது வழக்கம். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், சிக்கன், மீன் விற்பனை என்பது மற்ற நாட்களை விட இரட்டிப்பாக இருக்கும். இந்நிலையில் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் வரை இருந்தது. இதனால், இதனால், தமிழ்நாட்டில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த காலத்தில் மீன் விலை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து மீன் விலையும் உயர்ந்தது. அதன் பிறகு ஆடி மாதம் வந்தது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபடும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் வீடுகளில் கூழ் வார்த்து, படையிலிட்டு வழிபடுவார்கள். படையலில் அசைவ உணவுகள் பிரதானமாக இடம் பெற்றிருக்கும். இதனால், மீன் விலை என்பது குறையாமல் தடைக்காலத்தை போன்றே விற்பனையானது. இதனால், அசைவ பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பியதால் அனைத்து மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விசை படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினர். இந்நிலையில், அசைவ பிரியர்கள் காலை முதலே சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்தனர். இதனால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் திருவிழா போல கூட்டம் நிரம்பி வழிந்தது. அதே நேரத்தில் வழக்கத்தை விட மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. இதனால், மீன் விலை குறைந்தது.

அதாவது, கிலோ ரூ.1400 வரை விற்பனையான வஞ்சிரம் கிலோ ரூ.600க்கு விற்கப்பட்டது. மேலும் பாறை மீன் கிலோ ரூ.400, நண்டு ரூ.400, நெத்திலி ரூ.200, இறால் ரூ.350, கடம்பா ரூ.300க்கும் விற்பனையானது. நீண்ட மாதங்களுக்கு பிறகு மீன் விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் போட்டி போட்டு அதிக அளவில் மீன்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் வழக்கத்தை விட நேற்று மீன் விற்பனையும் அதிகமாக காணப்பட்டது. இதேபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post வரத்து அதிகரிப்பு காரணமாக காசிமேட்டில் மீன் விலை சரிவு: வஞ்சிரம் கிலோ ரூ.600, நெத்திலி ரூ.200, நண்டு ரூ.400க்கு விற்பனை, அசைவ பிரியர்கள் மீன்களை அள்ளி சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,Chennai Kasimet ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...