×

‘முதல்வன்’ பட பாணியில் அதிரடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு: தாமதமாக வந்த டாக்டர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

திசையன்விளை: திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாமதமாக வந்த டாக்டர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 9.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பதிவேடுகள் மற்றும் மாத்திரை, மருந்துகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு செவிலியர் மட்டுமே பணியில் இருந்துள்ளார்.

சில பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை. பலர் தாமதமாக வேலைக்கு வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு செம டோஸ் விட்டார். தொடர்ந்து பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர், பணியாளர்கள் மீது துறை ரீதியான நவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். மேலும் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் ஸ்டாக் உள்ளனவா என்பதையும், ஆய்வகங்களில் பரிசோதனை செய்யும் உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா? என்பதையும் பார்வையிட்டார்.

ஆய்வின் போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த வாகனத்தில் இருந்த மருந்துகள் எடுக்கப்படாமல் வெளியில் நிற்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். இதுகுறித்து செவிலியரிடம் விசாரித்த போது, டிரைவர் பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. மருந்து பெட்டிகள் சரிவர பாதுகாப்பின்றி இருப்பதை கண்ட அமைச்சர், அலட்சியத்துடன் பணியாற்றிய டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

நடிகர் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’ பட பாணியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அப்பகுதியினரிடம் வழிகேட்டு திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டது அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மருத்துவ துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ‘முதல்வன்’ பட பாணியில் அதிரடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு: தாமதமாக வந்த டாக்டர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Vector ,Ma ,Vector Government Initial Health Station ,Supremanian ,Station ,Dinakaran ,
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...