×

7 மாதங்கள் கடற்கரைக்கு ரயில் சேவை ரத்து சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே இயக்கம்: சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 140 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இனி, பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும். மேலும், பொதுமக்களின் நலனுக்காக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 140 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இதில், சென்னை கோட்டை ரயில் நிலையம் மூலமாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், பொதுமக்களும் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் தினசரி 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4 கிலோ மீட்டருக்கு புதிய பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள், நேற்று (27ம் தேதி) முதல், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதனால் அடுத்த 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கடற்கரை -பூங்கா நகர் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி செல்பவர்கள் இனிமேல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்துதான் செல்ல முடியும். அதேபோல சென்னை கடற்கரை வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில்தான் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும். 4வது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் 7 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் கடற்கரை ஆகிய பகுதிகளில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மினி பஸ் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மினி பஸ் அதிகளவில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து நேற்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 7 மாதங்கள் கடற்கரைக்கு ரயில் சேவை ரத்து சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே இயக்கம்: சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 140 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Chinthadirippet-Velachery ,Chinthadiripet ,CHENNAI ,Chennai Coast ,Egmore ,Velachery ,Chintadirippet-Velachery ,Chintadirippet ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...