×

தீவிரமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்திரயான் 3 நிலவின் தரைப்பரப்பில் உள்ள வெப்பநிலை மாற்றங்கள் கண்டுபிடிப்பு: இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவின் தென் துருவத்தில் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பரப்பில் உள்ள வெப்பநிலை மாற்றங்களை கண்டுபிடித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ம் தேதி எல்எம்வி 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து புவி வட்ட பாதை மற்றும் நிலவு சுற்றுவட்ட பாதைகளில் சரியாக பயணித்தது. ஆக.17ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து தனது பயணத்தை மேற்கொண்டு ஆக.23ம் தேதி மாலை 6 மணியளவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

நிலவில் தரையிறக்கப்பட்ட லேண்டரில் உள்ள கருவிகள் பிரத்யேகமான சோதனைகளை தரையிறக்கப்பட்ட இடத்தில் மேற்கொண்டு வருகிறது. மேலும் ரோவர் தரையிறக்கப்பட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லேண்டரில் உள்ள 2 கருவிகளில் ஒரு கருவியான சாஸ்டே சந்திரனின் நிலப்பரப்பில் வெப்ப இயற்பியல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த கருவி மூலம் நிலவில் தரைப்பரப்பில் வெப்ப நிலைகள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை கண்டறிந்துள்ளது. நிலவில் தரைப்பரப்பில் இருந்து ஆழமாக செல்லும் போது வெப்பம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

விக்ரம் லேண்டரில் உள்ள சாஸ்டே கருவியின் முதல்கட்ட ஆய்வு தகவல்கள் கிடைத்துள்ளது. சாஸ்டே கருவி என்பது சந்திரனின் நிலப்பரப்பில் வெப்ப இயற்பியல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. தென் துருவத்தில் நிலவின் மேற்பரப்பில் வெப்ப நிலைகள் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை புரிந்து கொள்ள இந்த ஆய்வுகள் உதவும். இதில் வெப்பநிலையை அளவிடும் கருவி மிக கவனமாக நிலவின் தரைப்பரப்பில் ஊடுருவ செய்து 10 செ.மீ. ஆழம் வரை தரைப்பரப்புக்கு அடியில் செல்லும் திறன் கொண்டது. இந்த கருவியில் 10 தனி சென்சார்கள் உள்ளன. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் நிலவின் தரைப்பரப்பில் பல்வேறு ஆழங்களில் வெப்ப நிலை மாறுபடுகிறது. மேலும் வெப்பநிலை குறைகிறது, இதுவே நிலவின் தென் துருவத்தில் கிடைத்திருக்கும் முதல் தகவல். மிகவும் விரிவான ஆய்வு முடிவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தீவிரமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்திரயான் 3 நிலவின் தரைப்பரப்பில் உள்ள வெப்பநிலை மாற்றங்கள் கண்டுபிடிப்பு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO News ,Chennai ,ISRO ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...