×

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நிலவு குறித்து உலகில் யாருக்குமே தெரியாத விவரங்கள் வெளிவரும்: இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

திருவனந்தபுரம்: சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து வரும் நாட்களில் உலகில் யாருக்குமே கிடைக்காத பல முக்கிய விவரங்கள் வரும் என்று திருவனந்தபுரத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. மகத்தான இந்த வெற்றிக்குப் பின்னர் இஸ்ரோ தலைவர் சோமநாத், திருவனந்தபுரம் வலியமலை திரவ இயக்கத் திட்ட மைய இயக்குனர் நாராயணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இஸ்ரோ தலைவர் சோமநாத் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் உள்ள பவுர்ணமிகாவு கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

சந்திரயான் 3ன் வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளது. வரும் நாட்களில் சந்திரயான் விண்கலத்திலிருந்து உலகில் யாருக்குமே கிடைக்காத மேலும் பல முக்கிய தகவல்கள் வரும். சந்திரயானின் பிரக்யான் ரோவரிலிருந்து முக்கியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. கூடுதல் விவரங்களை விரைவில் விஞ்ஞானிகள் வெளியிடுவார்கள். அனைத்து ஆய்வுகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. சந்திரயானின் எல்லா பாகங்களும் சரியாக செயல்பட்டு வருகின்றன. நமது இந்த வெற்றிப் பயணம் மேலும் தொடரும். விரைவில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் நிலவுக்கும் விண்கலங்களை அனுப்புவோம். சந்திரயான் 3ன் வெற்றியின் மூலம் எங்களுக்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. எங்களது ஆராய்ச்சிகள் மேலும் தொடரும். சந்திரயான் 3 மற்றும் சந்திரயான் 2 இறங்கிய இடங்களுக்கு பெயர் வைக்கப்பட்டதை ஒரு விவகாரமாக்க வேண்டாம். இதற்கு முன்பும் நிலவில் இந்தியாவும் மற்ற நாடுகளும் பெயர் வைத்துள்ளன. நிலவில் ஒரு பள்ளத்தாக்கிற்கு சாராபாய் கிரேட்டர் என முன்னர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 14 நாட்களுக்கு பின் ரோவர் செயல்படுமா?

14 நாட்களுக்குப் பின்னர் அடுத்த இரு வாரங்கள் நிலவில் முழு இருட்டாக இருக்கும். இந்த நாட்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே 135 டிகிரி வரை சென்றுவிடும். இந்த மிகவும் தாழ்ந்த வெப்பநிலையில் சந்திரயானின் ரோவர் பாகங்கள் செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருட்டான நாட்கள் வரத்தொடங்கிய உடன் சந்திரயானின் பாகங்கள் அனைத்தும் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்று விடும். 14 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் செயல்படும் வகையில் தான் அதனை உருவாக்கியுள்ளோம். எனவே அந்த நாட்களில் சந்திரயான் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக சோம்நாத் தெரிவித்தார்.

The post சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நிலவு குறித்து உலகில் யாருக்குமே தெரியாத விவரங்கள் வெளிவரும்: இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somanath ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...