×

ஓணம் பண்டிகை எதிரொலி; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு காய்கறி விற்பனை: கேரளாவிற்கு லாரிகளில் ‘பறந்தது’

ஒட்டன்சத்திரம்:: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ரூ.5 கோடிக்கும் அதிகமான காய்கறிகள் கேரளாவிற்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திலுள்ள காய்கறி மார்க்கெட், தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.

இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்காக காய்கறிகளை வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக இந்த மார்க்கெட்டில் விற்பனையாகும் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகளே மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களை கட்டியுள்ளது. ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காய்கறி மார்க்கெட் மற்றும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஓணம் பண்டிகைக்காக கேரளாவிற்கு சுமார் ரூ.5 கோடிக்கும் அதிக மதிப்பிலான காய்கறிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் 300க்கும் மேற்பட்ட லாரிகளில் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு சனிக்கிழமை வார விடுமுறை நாளாகும். இருப்பினும் ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் கொள்முதல் அதிகமாக இருக்கும் என்பதால் நேற்று மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. கடந்த சில தினங்களாக 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.500 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஓணம் பண்டிகை எதிரொலி; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு காய்கறி விற்பனை: கேரளாவிற்கு லாரிகளில் ‘பறந்தது’ appeared first on Dinakaran.

Tags : Oonam Festive ,Otansatram Market ,Kerala ,Oonam Festivival ,Kerla ,Otansacram Market ,Oenam Festive ,Otansatrah Market ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...