×

மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய லீலை அலங்காரம்: இன்று பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்

மதுரை: மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்க உள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று மாலை, நரியை பரியாக்கிய லீலை அலங்காரம் நடந்தது. அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர் – மீனாட்சியம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

பின்னர் சுவாமி – அம்மன் தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர். விழாவில் பாண்டிய மன்னனாக பட்டர், குதிரையில் வந்து லீலை குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். இந்த திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தனர். நரியை பரியாக்கிய லீலை பற்றிய பட்டர்கள் கூறுகையில், ‘‘மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் மாணிக்கவாசகர் அமைச்சராக பணியாற்றினார். அப்போது மன்னன், படைக்கு தேவைப்படும் குதிரைகளை வாங்குவதற்காக பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தார்.

திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்த மாணிக்கவாசகர், சிவாலய திருப்பணிக்காக கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் செலவிட்டார். இந்நிலையில் அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன், ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார்.

உடனே இறைவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைகளின் பாகன்களாக்கி, தானே அவைகளுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதை கண்ட அரசனும் மகிழ்ந்து, மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தான். ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின. உடனே அரசன், மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி ஆற்று சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். மாணிக்கவாசகரின் மகிமையை உணர்ந்த பாண்டிய மன்னன், அவரை விடுவித்தார்’’ என்றனர்.

ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது. இதற்காக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள். அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெறும். இதையொட்டி சுவாமி கோயிலில் இருந்து கிளம்பி இரவு மீண்டும் கோயிலுக்கு வரும் வரை இன்று நடை சாத்தப்பட்டு இருக்கும். சுவாமி இரவு கோயிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய லீலை அலங்காரம்: இன்று பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் appeared first on Dinakaran.

Tags : Meenatsiyamman Temple Nail ,Festival of Lile ,of Lile ,Madurai ,Sundereshwarar ,Meenadsiyamman ,Temple ,Mani Nani ,Kolam ,Nariya Pariyakiya Kolam ,Meenatsiyamman ,Festival ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி...