×

கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த 6 பேர் கும்பல் சிக்கியது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரவி (44)யும் அவரது நண்பர்கள் ரமேஷ், ஹரிகிருஷ்ணன், ஜெயராஜ், மாரி செல்வம், முருகன் ஆகியோரும் கடந்த 23ம் தேதி இரவு ரவி வீட்டில் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டினர். அவர்களிடம் இருந்து ₹5 ஆயிரம் ரொக்கப் பணம், 3 செல்போன்கள் மற்றும் ரமேஷ் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் சங்கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு பைக்குகளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் ரமேஷ் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் மற்ற 4 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்தும் கத்திமுனையில் மிரட்டி பணம், தங்க சங்கிலி மற்றும் செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செந்தில்குமார் தலைமையில் தனிப்படையினர், நேற்றிரவு வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் புத்தா (22), கல்யாணபுரம் நரேஷ்குமார் (எ) குரு (30), சென்ட்ரல் பிரேம்குமார் (39), அயனாவரம் பரத் (22), ஓட்டேரி நவீன் (எ) சின்ன வடை (18), கொத்தவால்சாவடி யுவராஜ் (எ) உப்பிலி (28) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்தனர்.

சீட்டாடும் பழக்கம் உடைய பாரிமுனை பகுதியைச் சேர்ந்த ரகுமான் (38) என்பவர், கொடுங்கையூர் பகுதியில் பணம் வைத்து சிலர் சீட்டாடுகிறார்கள். அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்தால், அவர்கள் போலீசில் புகார் அளிக்க முடியாது என்று தனது நண்பர்களான அஜய்புத்தா உள்ளிட்ட 6 பேரிடம் கூறியுள்ளார். இதனால் இவர்கள் 6 பேரும் கொடுங்கையூர் சென்று பணம் வைத்து சூதாடியவர்களை கத்திமுனையில் மிரட்டி பணம், தங்க சங்கிலி மற்றும் செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 6 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த 6 பேர் கும்பல் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Ravi ,Chennai Kodungayur ,Indira Nagar ,Ramesh ,Harikrishnan ,Jayaraj ,Mari ,Bliss ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது