×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோரையாறு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம், ஆக. 27: நீடாமங்கலம் அருகே அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோரையாறு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு அணை உள்ளது. இந்த அணை கடந்த 1874ம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து ஆண்டு தோறும் விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் வெண்ணாற்றிற்கு வந்து சேரும். அங்கிருந்து நீடாமங்கலம் அருகில் உள்ள கோரையாறு தலைப்புக்கு காவிரி நீர் வந்து சேருகிறது. கடந்தாண்டு தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியதால், கர்நாடகா அணைகளின் நீர் மட்டம் நிரம்பி, தொடர்ந்து 4 முறை மேட்டூர் அணையின் கொள்ளளவு நிரம்பியது. தண்ணீர் விரையமாகாமல் இருக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்கு தண்ணீரை கடந்த ஆண்டு மே.24 ம் தேதியே திறந்து விட்டார். இது வரலாற்று சாதனை என்று விவசாயிகள் பெருமிதம் அடைந்தனர்.

இந்நிலையில், கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வெண்ணாற்றி்ற்கு வந்த பிறகு, நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பிற்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, பாமனியாற்று பாசனம் மூலம் 38,357 ஏக்கர், கோரையாறு மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கர், சிறிய வெண்ணாற்றில் 94 ஆயிரத்துa 219 ஏக்கரில் விவசாயிகள் பாசன பணியை தொடங்கி மேற்கொள்கின்றனர். இவ்வாறு சிறப்பு மிக்க கோரையாறு தலைப்பில், இயற்க்கை சூழல் நிறைந்த இடமாகவும், ஆண்டு தோறும் பள்ளி, கல்லூரி மாணவர் வந்து செல்லும் ஒரு முக்கிய இடமாகவும் கோரையாறு தலைப்பு இருந்து வருகிறது. இங்கு ஆணி, புரட்டாசி, ஐப்பசி காலங்களில் விவசாயத்திற்கு தடையின்றி மீன் பிடி தொழில் நடை பெறும். அப்போது, அய்யரை, சாறுமுட்டி, பஞ்சனை, கட்லா, விரால், ரோகு,வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வகைளான மீன்கள் துள்ளி தாண்டும் நிகழ்வு ஆச்சரியமாக இருக்கும்.

இதையடுத்து கடந்த 5 முன் 110 விதியின் படி கோரையாறு தலைப்பு அணை (முணாறு தலைப்பு) சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. சில வேலைகள் நடந்த நிலையில் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் இந்த பகுதி மக்களின் கோரையாறு சுற்றுலா தலம் என கனவு நீண்ட நாளாகவே இருந்து வருகிறது. ஆனால் அதிமுக அரசு அந்த திட்டத்தை கைவிட்டு விட்டது. எனவே தமிழக அரசு கோரையாறு தலைப்பு அணையை சுற்றுலா தலமாக அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோரையாறு அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Koraiyar Dam ,AIADMK ,Needamangalam ,
× RELATED அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு...