×

காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு: தஞ்சாவூரில் 2334 பேர் ஆப்சென்ட்

தஞ்சாவூர், ஆக. 27: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023-ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2023 ம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்தது. அதில் விருப்பமுள்ள பட்டதாரிகள், இணைய வழியாக ஜூன் 1 முதல் 30ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப்பணியிடங்களுக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 709 பேரும், பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40 ஆயிரத்து 901 பேரும் என மொத்தம் 621 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 610 பேர் விண்ணப்பித்துள்ளனர். காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத காலிப் பணியிடங்களுக்கு 6 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கான தேர்வானது நேற்று நடந்தது. இன்றும் இத்தேர்வு நடக்கிறது. பொது குழுவினருக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 மையங்களிலும், காவல்துறை சார்ந்த நபர்களுக்காக 12 மையங்களிலும் தேர்வு நடக்கிறது. நேற்று பொது பிரிவினருக்கும், இன்று காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. காலையில் மெயின் தேர்வும், பிற்பகலில் தமிழ் தகுதித்தேர்வும் நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் எனவும், பின்னர் 9 மணியிலிருந்து நுழைவுச் சீட்டுடன், ஏதாவது ஒரு அரசின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும், எலக்ட்ரானிக் சாதனம் எதுவும் அனுமதியில்லை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வானது காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரையும் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா கொண்டு கண்காணித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமாக நான்கு மையங்களில் இந்த தேர்வானது நடைபெறுகிறது.

இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் காலையில் தேர்வு எழுத 6242 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1101 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன்படி மொத்தம் 5141 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் மதியம் தேர்வுக்கு 6976 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 1233 பேர் தேர்வு எழுத வரவில்லை. 5743 தேர்வு எழுதினர். இந்த தேர்வானது தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, சாஸ்திரா யுனிவர்சிட்டி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி என நான்கு கல்லூரிகளில் தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக சுமார் 400 போலீசார் தேர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் தமிழ்நாடு சீருடை பணியாளர் எஸ்பி நேரில் சென்று பார்வையிட்டார். முழு பரிசோதனைக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 899, பெண்கள் 201 என மொத்தமாக 1090பேர் தேர்வு எழுதுகின்றனர். செல்போன், கால்குலேட்டர், லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. மாணவர்கள் சரியான நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் வரவேண்டும், செல்போன் எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

The post காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வு: தஞ்சாவூரில் 2334 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu Uniformed Staff Examination Board ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை சம்பா பயிர் பாசன தேவை பூர்த்தியாகும்