×

1,500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிப்பு

நாமக்கல், ஆக.27: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 1500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிப்பது என தீர்மானம் செய்யப்பட்டது. இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை, தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேவையான மின்னணு புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில், போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்வதற்காக, நடப்பு ஆண்டுக்கான கால அட்டவணையை கடந்த வாரம் வெளியிட்டது.

வரும் அக்டோபர் 17ம்தேதி வரைவு வாக்களார் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் முதல் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம். இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பு, வாக்குச்சாவடிகள் வரையறை பணி மேற்கொள்ள வேண்டும் என, தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து, புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை, அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்.

வாக்குச்சாவடி பெயர் மாற்றம், 2 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 1,627 வாக்குசாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி வாக்குச்சாவடிகள் பிரித்தல், இணைத்தல், வாக்குச்சாவடிகள் பெயர் மாறுதல் போன்ற கோரிக்கை குறித்து, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓவிடம் அரசியல் கட்சியினர் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் புதிதாக ஏற்படுத்துதல், கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம், பெயர் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1,627 வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவும், 2 கி.மீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள வாக்குச் சாவடிகளை அருகிலுள்ள வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், மொத்தம் 23 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும், நாமக்கல் நகராட்சியில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக நகர செயலாளர் சிவக்குமார், நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், ஆர்டிஓ சரவணன், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 1,500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிப்பு appeared first on Dinakaran.

Tags : of polling ,Namakkal ,Dinakaran ,
× RELATED போலி பில் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை