×

சாலையோர மரங்களை வெட்டி கடத்த முயற்சி

நல்லம்பள்ளி, ஆக.27: நல்லம்பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் மரங்களை அடியோடு வெட்டி சாய்த்து கடத்த முயன்ற சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். நல்லம்பள்ளி அருகே தொம்பரகாம்பட்டி பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சுங்க சாவடி நிர்வாகம் மூலம் இந்த நெடுஞ்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. வழிநெடுகிலும் ஏராளமான மரங்கள் பராமரிக்கப்படும் நிலையில், நேற்று அதிகாலை 3 மரங்களை அடியோடு சாய்த்த மர்ம கும்பல், அதனை வெட்டி கடத்த முயன்றுள்ளனர். அதற்குள் பொழுது புலர்ந்ததால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மரம் வெட்டி கொண்டிருந்த கும்பலை பார்த்ததும் மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால், மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், மர்ம கும்பலால் வெட்டப்பட்ட மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, தொப்பூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்மகும்பல் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலையோர மரங்களை வெட்டி கடத்த முயற்சி appeared first on Dinakaran.

Tags : Nallampally ,National Highway ,
× RELATED கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்