×

இஸ்ரோவின் வெற்றிக்கு நேரு தான் காரணம்: காங்கிரஸ் பெருமிதம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வையே இஸ்ரோவின் வெற்றிக்கு காரணம் என காங்கிரஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தது. இந்த வெற்றியை பலரும் பல்வேறு விதமாக கொண்டாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விண்வௌி துறையின் வெற்றிக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வையே காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில், “இந்தியாவில் விண்வௌி ஆராய்ச்சிக்கான பயணம் 1962ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, 1961ம் ஆண்டு பாகிஸ்தானில் தேசிய விண்வௌி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இஸ்ரோவின் சிறந்த சாதனைகள் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் ஏராளமான செய்திகள் வௌியாகி உள்ளன. அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்ற வல்லரசு நாடுகளுடன் இணைந்து விண்வௌி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் கூறினாலும், நேரு முதல் நாளிலிருந்தே வல்லரசுகளுடன் இணையாமல் விண்வௌி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்று விரும்பினார்.

விண்வௌி திட்டங்கள் இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கொள்கையில் நேருவும், இந்திரா காந்தியும் உறுதியாக இருந்தனர்.
நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அடித்தளமும், பரந்த உள்கட்டமைப்பும் ஏழ்மை நாடான இந்தியாவில் அதிக செலவுகள் ஆகும் என்று கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன், விஞ்ஞான ரீதியாக முன்னேறிய நாடு பற்றிய நேருவின் தொலைநோக்கு பார்வை தான் இந்திய விண்வௌி துறையில் இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இஸ்ரோவின் வெற்றிக்கு நேரு தான் காரணம்: காங்கிரஸ் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Nehru ,Isra ,Congress ,New Delhi ,Javaharlal Nehu ,Moon ,Israel ,
× RELATED நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்...