×

தமிழகத்தை 2 புயல்கள் ஒரே நேரத்தில் தாக்கினால் உயிர், பொருள் சேதம் இல்லாமல் தப்பும் தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

சென்னை: ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்பும் தொழில் நுட்பம் மூலம் பொருள், உயிர் சேதம் தவிர்க்கப்படும் வகையில் சென்னை, ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி. விண்வெளி இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஆர்.யு.சுஜித் கூறியதாவது: இயற்கையின் பெரிய சவால்களான புயல், மழை, பூகம்பம் உள்பட இயற்கை பேரழிவுகளை முன் கூட்டியே கணிப்பதன் மூலம் மனித உயிர்களை காப்பதுடன், பொருள் சேதம் போன்றவற்றை தவிர்ப்பதுடன், அசம்பாவித சம்பவங்கள் நடப்பது தடுக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு புயல் தாக்கும்போது கடலோர மக்கள் பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்து மாநில அரசுகள், அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதை அடிக்கடி பார்க்கலாம்.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் அதனை கணிப்பதில் பெரும் அறிவியலுக்கே சவால் விடும் வகையில் இருக்கும். இதற்கு தீர்வை காணும் வகையில் சென்னை, ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதற்காக சென்னை, ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், ஜெர்மனியின் ‘போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஆப் கிளைமேட் இம்பாக்ட் ரிசர்ச்’ ஆராய்ச்சியாளர்கள் மழை, சூறாவளி, புயல் போன்றவற்றின் தரவுகளின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் பெயர் ‘புஜிவாரா தொடர்பு’ என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தை கொண்டு 2 சூறாவளி புயல் காற்றுகளுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் 2 புயல்களின் வெவ்வேறு நிலைகளையும் புரிந்து கொள்ள முடியும் என்றும், அதன் ஆரம்ப குறிப்புகளை துல்லியமாக கணிக்க முடியும் என்றும், இதற்கு முன்பு வழக்கமான முறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களைவிட இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் விவரங்கள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.  இந்த தொழில்நுட்பத்தால், பேரழிவுகளின் தாக்கத்தை முன் கூட்டியே அறிந்து அதனை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க போதுமானதாக இருக்கும் என சென்னை ஐ.ஐ.டி. விண்வெளி இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஆர்.யு.சுஜித் தெரிவித்தார்.

The post தமிழகத்தை 2 புயல்கள் ஒரே நேரத்தில் தாக்கினால் உயிர், பொருள் சேதம் இல்லாமல் தப்பும் தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...