×

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்ட பாலங்கள்: 17 புதிய மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம்

 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்ட பாலங்கள் கட்டும் பணியை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் 17 மேம்பால பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாநில, மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் கருதி சென்னைக்கு வருவதால் மக்கள் தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சென்னை நாளுக்கு நாள் விரிவடைந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண சாலைகளில் கூட போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது.

இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டது. அந்த பாலங்கள்தான் தற்போதையை போக்குவரத்து நெரிசலை குறைத்து தற்போது ஓரளவுக்கு சீரான போக்குவரத்துக்கு உதவி வருகிறது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான பாலங்களை கட்டத் தொடங்கியுள்ளனர். சாலை கட்டமைப்புகளும், புதிய பாலங்களும் கட்டும் பணிகள் சென்னையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடையும் பட்சத்தில் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், போக்குவரத்து மிகுந்த இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் ஓரளவு நீண்ட துாரத்திற்கு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுபோல் ஜிஎஸ்டி சாலை மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் புதிய நீளமான பாலங்கள் உள்ளன. ஆனால், சென்னையின் மையப் பகுதிகளில் ஓரளவு பாலங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் தான் உள்ளன. சென்னை மாநகரின் முதுகெலும்பாக விளங்கும் அண்ணாசாலையில்-தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை ஆகியவற்றை இணைக்கும் வகையில் சற்று நீண்ட பாலம் கட்டப்பட திட்டமிட்ப்பட்டுள்ளது. இது சுமார் 3 கி.மீ. துாரத்துக்கு கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ 621 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

அண்ணா சாலையில் நந்தனம், தேனாம்பேட்டை, சிஐடி காலனி ஆகிய சிக்னல் தான் மிகவும் முக்கியமானது. எப்போதுமே இந்த சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். சென்னையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மக்கள் செல்லும் போது, இந்த இடங்களில் தான் சிக்னலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சே இருக்காது. மேலும், சென்னை மாநகரில் தி.நகரை பொறுத்தவரை போக்குவரத்து எப்போதும் மிக அதிகமாகவே உள்ளது. இங்கு பீக் ஹவரில் 10 ஆயிரம் வாகனங்களும், சாதாரண நேரங்களில் 5 ஆயிரம் வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து உஸ்மான் ரோடு வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு தற்போது பாலம் இருக்கிறது.

இந்த பாலமானது 2008ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தினை மையமாக வைத்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. அண்ணாசாலை -சைதாப்பேட்டை-சிஐடி நகர் பகுதியில் இருந்து கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் வரை பாலம் கட்டப்பட உள்ளது. சைதாப்பேட்டை சிஐடி நகரிலிருந்து தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைக்கும் வகையில் 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ130 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் முடிந்த பிறகு, உஸ்மான் மேம்பாலத்திலிருந்து கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் வரை மீதி பகுதி கட்டப்பட உள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டால் அண்ணாசாலையில் இருந்து மகாலிங்கபுரம் வரை 4 கிலோ மீட்டர் துாரம் வரை ஒரே பாலம் என்ற நேரடி இணைப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த புதிய பாலமானது முற்றிலும் கான்கிரீட்டால் அமைக்கப்படுவதற்கு பதிலாக இரும்பு துாண்கள் கொண்ட பாலமாக அமைய உள்ளது. சைதாப்பேட்டை பகுதியில் இருந்து மகாலிங்கபுரம் வரை செல்ல சுமார் 30 நிமிடம் ஆகிறது. இந்த பாலம் கட்டப்பட்டு விட்டால் 5 நிமிடத்தில் சென்று விடலாம். இந்தபாலத்தில் 4 இடங்களில் வாகனங்கள் நுழைய வெளியேற இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இந்த புதிய பாலம் கட்டுமானப்பணியானது அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர சென்னை மாநகரில் மேலும் 5 இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன. ​​மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்குக் கீழே கட்டப்படும் இந்த ஐந்து புதிய மேம்பாலங்கள், புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருவோருக்குப் பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறது.

இந்த மேம்பாலங்களை மாநில நெடுஞ்சாலைத் துறைக்காகச் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கட்டவுள்ளது. மியாட் மருத்துவமனைக்கு அருகில் 3.14 கிமீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இது தவிர சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம் மற்றும் காட்டுப்பாக்கம் பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. இங்குள்ள போக்குவரத்து நெரிசல்களை இந்த புதிய மேம்பாலங்கள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 17 மேம்பால பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பணிகள் முடிவடைந்தால் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்ைன மாநகராட்சி சார்பில் சென்னையை அழகுபடுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் சென்னை மக்களின் முக்கிய பிரச்னையாக இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தான் சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் தற்போது 17 புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை மெட்ரோல் ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான் மேம்பாலப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவைகளால் தற்போது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் சென்னையில் வெகுவாக குறையும்.சென்னை மாநகரின் முதுகெலும்பாக விளங்கும் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை ஆகியவற்றை இணைக்கும் வகையில் சற்று நீண்ட பாலம் கட்டப்பட திட்டமிட்ப்பட்டுள்ளது. இது சுமார் 3 கி.மீ. துாரத்துக்கு கட்டப்பட உள்ளது.

The post சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்ட பாலங்கள்: 17 புதிய மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Government of Chennai ,Chennai ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...