×

பேருந்து நடத்துனர்களிடம் இருந்து எதிர்பாராத விதமாக டிக்கெட் பண்டல் தொலைந்தால் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது: போக்குவரத்து கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை மண்டலத்தில் 1990 முதல் நடத்துனராக பணியாற்றி வருபவர் ஏ.பிரபாகரன். இவர் கடந்த 2010 அக்டோபர் 17ம் ேததி கோவையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் பணிக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேர காப்பாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு தனது வருகையை பதிவு செய்துவிட்டு டிக்கெட் பண்டலை வாங்கியுள்ளார். பின்னர் அந்த டிக்கெட் பண்டலை ஓட்டுனர் இருக்கையின் இடதுபுறத்தில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் டிக்கெட் பண்டலை காணவில்லை. இதையடுத்து, நிர்வாகத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த டிக்கெட் பண்டலில் உள்ள டிக்கெட்களின் தொகையான ரூ36,103ஐ அவரது சம்பள பணத்திலிருந்து போக்குவரத்து கழகம் பிடித்தம் செய்ய 2010 நவம்பரில் உத்தரவிட்டது. அதன்படி அவரது சம்பளத்திலிருந்து மாதம் ரூ1000 பிடித்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஓய்.ஜார்ஜ் வில்லியம் ஆஜராகி, போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும் போக்குவரத்து கழகத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி தொலைந்துபோகும் டிக்கெட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நடத்துனர்களிடமிருந்து சம்பள பிடித்தம் செய்ய கூடாது. இந்த ஒப்பந்தம் இன்னும் அமலில் உள்ளது. இந்த நிலையில் மனுதாரரின் மாத சம்பளத்தில் இதுவரை 30 மாதங்கள் தலா ரூ1000 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற வழக்கில் பேருந்து நடத்துனரிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப தருமாறு உயர் நீதிமன்றம் கடந்த 2011ல் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு 2012ல் இரு நீதிபதிகள் அமர்வால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கும் போக்குவரத்து கழகத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளதால் மனுதாரரின் வழக்கிற்கும் இது பொருந்தும். எனவே, மனுதாரரின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரிடம் பிடித்தம் செய்த தொகையை திரும்ப தருவது குறித்து போக்குவரத்து கழகம் 4 வாரங்களுக்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post பேருந்து நடத்துனர்களிடம் இருந்து எதிர்பாராத விதமாக டிக்கெட் பண்டல் தொலைந்தால் சம்பள பிடித்தம் செய்யக்கூடாது: போக்குவரத்து கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Transport Corporation ,Chennai ,Tamil Nadu Government Transport Corporation ,Govai Zone ,Prabakaran ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...