×

சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர், அரியானா மாநிலங்களில் ஆளுநர்கள் மவுனம் காக்கிறார்கள்: பஞ்சாப் ஆளுநர் மிரட்டலுக்கு முதல்வர் பதிலடி

சண்டிகர்: பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று ஆளுநர் மிரட்டுகிறார். ஆனால் பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அமைதி காத்து வருகின்றனர் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்று முதல்வர் பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் பக்வந்த் மான் சண்டிகரில் கூறியதாவது: 356வது சட்டப்பிரிவு மற்றும் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைப்பேன் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநர் எனக்கு 16 கடிதங்களை எழுதி இருக்கிறார். இதில் 9 கடிதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மற்ற கடிதங்கள் தகவல்களை பெறுவதற்காக காத்திருக்கிறது. ஆளுநர் அவசரமாக கடிதங்களை எழுதிவிட்டு உடனடியாக பதிலை எதிர்பார்க்கக்கூடாது. ஆளுநரிடம் ஒன்று கேட்கிறேன்? அரியானாவின் நூவில் என்ன நடந்தது? வகுப்புவாத மோதல்கள், வன்முறைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து அம்மாநில ஆளுனர் முதல்வர் கட்டாருக்கு ஏதாவது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரா? இல்லை. ஏனென்றால் அங்கு பாஜ அரசு ஆட்சி செய்கிறது. பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படுகிறார்.

ஆனால் பஞ்சாப் ஆளுநர், இனரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் குறித்து அந்த மாநில ஆளுநர் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. மணிப்பூரில் அரசியலமைப்பு சட்டம் பொருந்தவில்லையா?. உத்தரபிரதேசத்தில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒரு கொலை நடக்கிறது. ஆனால், சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உ.பி. கவர்னர் ஏதாவது கடிதம் அனுப்பத் துணிவாரா?. எனவே ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது போன்ற அச்சுறுத்தல்கள் என்னையும் பஞ்சாபியர்களையும் பயமுறுத்தாது. இவ்வாறு கூறினார்.

*அடிபணிய மாட்டேன்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறும்போது,’டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜ அல்லாத அரசுகளின் செயல்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு இது நல்லதல்ல. பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களைத் தவிர பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் ஆளுநர்களின் பெயர்கள் தெரியாது.

ஏனெனில் ஆளுநர்கள் பெயர்கள் தெரியும் மாநிலங்கள் அனைத்தும் பாஜ அல்லாத அரசுகளால் ஆளப்படுகின்றன. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதை எதிர்த்து தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது தெரியுமா?. எனவே ஆளுநரின் இது போன்ற மிரட்டலுக்குஎல்லாம் நான் அடிபணிய மாட்டேன். வேண்டுமானால் தேர்தல் நடக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்திற்கு பா.ஜவின் முதல்வர் வேட்பாளராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செல்லட்டும்’ என்றார்.

The post சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர், அரியானா மாநிலங்களில் ஆளுநர்கள் மவுனம் காக்கிறார்கள்: பஞ்சாப் ஆளுநர் மிரட்டலுக்கு முதல்வர் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Governors ,Manipur, Ariana ,Chief Minister ,Punjab ,Governor ,Chandigarh ,President ,BJP ,Manipur ,Ariyana ,CM ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...