×

பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு

* 3 ஆண்டு கோரிக்ைக நிறைவேறியது
* வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: தரம் உள்பட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு, சேலம் ஜவ்வரிசிக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே சேலத்தில் தான், மரவள்ளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 32ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 38 டன் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி உற்பத்தியாகிறது. மரவள்ளியில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் ஜவ்வரிசி தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கொல்கத்தா, மகாராஷ்டிரா, உத்தபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தரமானது என்பதால், வடமாநிலங்களில் சேலம் ஜவ்வரிசிக்கு தனி மவுசு உள்ளது. ஸ்டார்ச் பவுடரில் இருந்து குளுகோஸ், பவுடர், மாத்திரை மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தனை பெருமைமிக்க சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த ஒன்றிய அரசு, சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. சேலம் சேகோ சர்வ் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் சேகோ சர்வ் அதிகாரிகள், ஜவ்வரிசி, ஸ்டார்ச் வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பலகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு appeared first on Dinakaran.

Tags : Salem Javarisi ,Salem ,Salem Jovvarisi ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...