×

வடசென்னையில் 6 பேருந்து நிலையங்களை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை: வடசென்னையில் திரு.வி.க நகர் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாததால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக வடசென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறை, முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலைய வளாகத்தில் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரு.வி.க நகர் மற்றும் வடசென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இவற்றை சரி செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 பேருந்து நிலையங்களை மறுசீரமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: திரு.வி.க நகர் உள்ளிட்ட வடசென்னையில் உள்ள 6 பேருந்து நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.

நவீன கூரை, சோலார் பேனல்கள், சுத்தமான கழிவறைகள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, காத்திருப்பு அறைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மறுசீரமைப்பு பணி தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் சிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் தயாரித்த வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சிஎம்டிஏ அதிகாரிகள் கூறினர்.

The post வடசென்னையில் 6 பேருந்து நிலையங்களை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vadasenna ,CMDA ,Chennai ,Vadasennai ,CV ,Jha Nagar ,Dinakaran ,
× RELATED வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை...