×

துபாயில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை: தமிழக அரசு ஏற்பாடு

மீனம்பாக்கம்: துபாய் நாட்டில் வேலைபார்த்த தமிழக தொழிலாளிக்கு திடீரென சிறுநீரக மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் கோரிக்கையின்பேரில், துபாயில் இருந்து 3 மணி நேரத்தில் தமிழக அரசின் ஏற்பாட்டின் மூலமாக துபாயிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் ஸ்ட்ரெச்சர் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பை குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சபியுல்லா அப்துல் சுபஹான். இவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்சின் ராஸ் அல்கைமாவில் வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மே 24ம் தேதி சபியுல்லாவுக்கு திடீரென சிறுநீரக மற்றம் நுரையீரல் நோய் தொற்றினால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால், அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள உறவினர்களோ, நண்பர்களோ இல்லை.

இதனால் அவரை மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரவேண்டும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையத்துக்கு கடந்த 19ம் தேதி சபியுல்லாவின் மனைவி ஷமிலா பானு கோரிக்கை விடுத்திருந்தார். இம்மனுவின் முக்கியத்துவம் உணர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மஸ்தான் ஆகியோரின் கவனத்துக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து, இம்மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் புலம்பெயர்ந்த சபியுல்லாவை சென்னையில் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க, கடந்த 22ம் தேதி தமிழ்நாடு அயலகத்துறை தமிழர் நலன் துறை மின்னஞ்சல் வாயிலாக வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் பயணிகளுக்கு எவ்வித நோய்தொற்றும் ஏற்படாத வகையிலும், நோயாளிக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையிலும் விமானத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபடி அழைத்து வருவதற்கும், அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில், சிறுநீரக மற்றும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளி சபியுல்லா ஸ்ட்ரெச்சர் படுக்கை வசதியுடன் அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சபியுல்லா ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், அவரை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு விரைவாக செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.துபாயில் இருந்து விமானத்தில் சபியுல்லா சென்னை கொண்டு வரப்பட்டதும், அவருக்கு குடியுரிமை, சுங்க சோதனைகள் முடித்து, சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 9.30 மணியளவில் வாகன நெரிசல் மிகுந்த அண்ணாசாலை வழியே ஆம்புலன்ஸ் இடையூறு இல்லாமல் விரைவாக செல்வதற்கு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சுமார் அரைமணி நேரத்துக்கும் குறைவாக விமானநிலையத்தில் சபியுல்லாவை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அங்கு சபியுல்லாவுக்கு தீவிர சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் சிறுநீரக மற்றும் நுரையீரல் நோய்தொற்றினால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளி சபியுல்லாவுக்கு, அவரது மனைவி கோரிக்கை அளித்த 3 மணி நேரத்தில் விசாரித்து, 4 நாட்களுக்குள் அவரை சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு சபியுல்லாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

The post துபாயில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை: தமிழக அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Tamil Nadu government ,Meenambakkam ,Tamilnadu ,
× RELATED 2028ல் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு நடத்த...